முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் ஆகியோர் அடுத்த சில நாட்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தற்போது நடத்தப்பட்டு வரும் சிறப்பு விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட உள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டு வளாகத்தில் பல வீடுகளை சட்டவிரோதமான முறையில் தனிநபர்களுக்கு வழங்க பரிந்துரைகளை சமர்ப்பித்தல் மற்றும் கடிதங்களை வழங்கியமை தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய காலத்தில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையகத்தால் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த காலப்பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் பணியாற்றிய பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த அதிகாரிகள் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் சட்டமா அதிபரிடமும் விசாரணை நடத்த ஆணையகம் முடிவு செய்துள்ளது.
எனவே, அடுத்த சில நாட்களில் அவர்கள் இருவரையும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
