பாகிஸ்தானின் லாகூரிலுள்ள ஹோட்டலொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் கொல்லப்பட்டதோடு ஏழு பேர் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்தோடு 275பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தீ விபத்துக்கு உள்ளான கட்டடத்தில் சிக்குண்டிருந்தவர்களை அவசர அவசரமாக மீட்கும் பணியில் தீயணைக்கும் படை வீரர்கள் ஈடுபட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் அந்த அதிகாரிகள் மேலும் கூறுகையில், லாகூரில் நூர் ஜெஹான் வீதியில் அமைந்துள்ள இண்டிகோ ஹோட்டலில் கல்லூரி ஒன்றின் வைபவமொன்று நடந்து கொண்டிருந்த போது இத்தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்ததும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பல தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன.
21 அவசர வாகனங்களும் சுமார் 80 மீட்புப் பணியாளர்களும் அதிகாரிகளும் இந்த மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றதாக மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர். இத் தீ விபத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஏழு பேர் வெளியேற்றப்பட்டனர், அவர்களில் சிலர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
