சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறும் என கவுன்சில் தலைமை தெரிவித்து உள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.
இதற்கு, ரஷியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய அரசு இதற்கு கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை கவனித்து வருவதுடன், வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.
ஐ.நா. பொது சபையின் தலைவரான அன்னலேனா பேயர்போக் வெனிசுலா விவகாரம் பற்றி இன்று பேசும்போது, ஐ.நா. சாசனத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டியது கட்டாயம். அது, இஷ்டத்திற்கு செயல்படுவதற்கானது அல்ல. ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கு எதிராக எந்த வகையிலும் நாடுகள் செயல்படாமல் தவிர்க்க வேண்டும் என சுட்டி காட்டினார்.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை காலை 10 மணியளவில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறும் என கவுன்சில் தலைமை தெரிவித்து உள்ளது.
இதனை ஐ.நா.வுக்கான சோமாலியா நாட்டு நிரந்தர அமைப்பின் செய்தி தொடர்பாளர் கதீஜா அகமது கூறியுள்ளார். 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சுழற்சி அடிப்படையில் சோமாலியா தலைவராக செயல்பட்டு வருகிறது.
இதில், வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கையை தொடர்ந்து முதல் நாடாக கொலம்பியா அதிபர் பெட்ரோ ஐ.நா. அவசர கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை காலை அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது
