அமெரிக்க விமானப் படையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இஸ்ரேலில் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
20க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகளவில் தென்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரான் நாட்டில் உள்நாட்டுக் குழப்ப நிலைகளும் போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வரும் நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க காத்திருப்பதாக சர்வதேச பரப்பில் பேசப்பட்டு வருகிறது.
எப்போது வேண்டுமானாலும் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்த்தும் விதமாகவே அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா அதன் படைகளை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இடம் மாற்றி வருகிறது. தாக்குதலுக்கு தயாராகி வருவதால் அமெரிக்கா தனது படையினரைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதை இந்த செயற்பாடுகள் எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது.
அதன்படி, கட்டாரின் அல் உதீத் படைத்தளத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட படைவீரர்களை இடம் மாற்றியுள்ளது என்பதை அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் இராணுவ தளங்கள் அமைந்துள்ள பஹ்ரைன், ஈராக், சிரியா, குவைத், சவூதி அரேபியா, ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளிலும் உள்ள இராணுவ அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதோடு, அவர்களது ஆயுதங்களும் வேறிடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வேளை ஈரானுடன் போர் ஏற்பட்டால் அமெரிக்க வீரர்கள் தாக்கப்படலாம் என்பதாலேயே வீரர்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தனது வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அமெரிக்கா இடம் மாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
அமெரிக்கா தாக்கினால், தாமும் பதில் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனையடுத்து, தற்போது அமெரிக்காவின் 2 விமானந்தாங்கிக் கப்பல்கள் ஈரானிலிருந்து சற்று தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரானின் தாக்குதலை பலமாக எதிர்கொள்ள இவ்வாறு தயார் நிலையில் அமெரிக்கா இருப்பதாகவும் பேசப்படுகிறது.
