News

அமெரிக்கா போரைத் தொடங்கினால் ‘பிராந்திய போராக’ வெடிக்கும் – ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை

 

ஈரான் மீது அமெரிக்கா ஏதேனும் இராணுவத் தாக்குதலை நடத்தினால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலாக மட்டும் அமையாது, ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் தழுவிய ஒரு “பிராந்திய போராக” (Regional War) விரிவடையும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாக விடுத்த அச்சுறுத்தல்கள் மற்றும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை (Revolutionary Guard Corps) ஒரு பயங்கரவாத அமைப்பாக பெயரிட ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, கொமேனி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரான் அரச தொலைக்காட்சியின் செய்திகளின்படி, “அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இம்முறை அது ஒரு பிராந்திய போராக இருக்கும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என கொமேனி தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் எவரையும் தூண்டிவிடுபவர்கள் அல்ல என்றும், தாம் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த விரும்பவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், எனினும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோர் அல்லது துன்புறுத்துவோர் எவருக்கும் ஈரானிய மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் வலியுறுத்தினார்.

ஈரான் மீது அதிகரித்து வரும் இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியில் கொமேனியிடமிருந்து வெளிவந்துள்ள மிகக் கடுமையான எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி ட்ரம்ப் போரைத் தவிர்க்க விரும்புவதாகவும், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதையே விரும்புவதாகவும் வொஷிங்டன் தரப்பு மீண்டும் மீண்டும் கூறி வருகின்ற போதிலும், ஏனைய மாற்று வழிகள் குறித்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் அந்நாட்டு போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் அரசாங்கம் பலத்தைப் பிரயோகிப்பது தொடர்பாக ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்து வருவதாக ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top