World

அமெரிக்க–ஈரான் பேச்சில் முன்னேற்றத்தையடுத்து நெதன்யாகு முன்கூட்டியே வொஷிங்டனுக்கு விரைவ

 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எட்டப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடந்த 12 மாதங்களில் 7 ஆவது முறையாக சந்திப்பதற்கு இன்று (10) அமெரிக்கா விரைந்துள்ளார்.

காசா போர் நிறுத்தத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட ‘அமைதிச் சபையின்’ முதல் கூட்டம் வொஷிங்டனில் எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி டிரம்ப் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் வகையில் எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதியே நெதன்யாகு அமெரிக்கா புறப்படவிருந்தார். எனினும் ஈரான் விவகாரத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை அடுத்தே அவர் முன்கூட்டியே அமெரிக்கா சென்றுள்ளார்.

நெதன்யாகு தனது அமெரிக்க பயணத்தில் ஈரானில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை தூண்டும் தனது நீண்ட கால திட்டம் தொடர்பான பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ஓமானில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை சிறந்த முறையில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே நெதன்யாகுவின் அமெரிக்க விஜயம் இடம்பெற்றுள்ளது.

நெதன்யாகு–டிரம்ப் இடையிலான கடந்த கால சந்திப்புகள் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளன. கடந்த டிசம்பர் 29 இல் புளோரிடாவில் நெதன்யாகுவுடனான டிரம்பின் கடைசி சந்திப்பை அடுத்தே, ஈரானின் ஏவுகணை திட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து டிரம்ப் வலியுறுத்தி இருந்தார்.

ஈரான் தனது அனைத்து யுரேனிய செறிவூட்டல்களையும் நிறுத்தி, பலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் தீவிரத்தைக் குறைத்து, பிராந்தியத்தில் உள்ள ஆயுதக் குழுக்களுடனான உறவை முறிக்கும்படி இஸ்ரேல் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. எனினும் இந்தக் கோரிக்கைகளை நிராகரித்து வரும் ஈரான், தடைகளில் தளர்வை கொண்டுவருவதற்கு பகரமாக தனது அணுத் திட்டங்களை மட்டுப்படுத்துவதற்கு மாத்திரம் இணக்கத்தை வெளியிட்டு வருகிறது.

ஈரானில் அண்மையில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆட்டங்களை அடுத்து ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததோடு, அதனையொட்டி பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தையும் பலப்படுத்தி இருந்தது. எனினும் ஓமான் பேச்சுவார்த்தையை அடுத்து நிலை சுமுகம் அடைந்துள்ளது.

எனினும் 2015 இல் ஈரானுடனான அமெரிக்காவின் அணு உடன்படிக்கையை டிரம்ப் அகற்றிக்கொண்டதை அடுத்து இஸ்ரேலின் செல்வாக்குக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முக்கிய முன்னேற்றமும் எட்டப்படவில்லை. இந்நிலையில் டிரம்புடனான சந்திப்பு நெதன்யாகுவுக்கு ஈரான் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானுடன் ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்தாலும், இஸ்ரேல் தனிப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் வாய்ப்பு இன்னும் உள்ளது என்பதை நெதன்யாகுவின் அமைச்சரவையில் உள்ள சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இஸ்ரேலிய இராணுவ வானொலியில் நேற்று பேசிய எரிசக்தி அமைச்சர் எலி கோஹேன், ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மிகக் கடுமையான அச்சுறுத்தலாகக் கருதுகிறது என்றும், எந்த ஒப்பந்தமும் இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யாவிட்டால் ‘நடவடிக்கை எடுக்கும் உரிமையை’ இஸ்ரேல் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜுனில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 12 நாட்கள் நீடித்த மோதலின்போது அமெரிக்காவும் இணைந்து ஈரானின் இராணுவம் மற்றும் அணு நிலைகளை தாக்கி இருந்தது. தற்போது அமெரிக்க படைகள் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டிருப்பது, ஈரான் மீதான விரைவான தாக்குதல் ஒன்றுக்கான வாய்ப்பாக இஸ்ரேல் கருதுகிறது.

ஆரம்பத்தில் டிரம்பின் அமைதிச் சபையில் பங்கேற்பதற்கே நெதன்யாகு வொஷிங்டன் செல்லவிருந்தார். இந்த அமைதிச் சபை காசாவை கட்டியெழுப்பும் பொறிமுறை ஒன்றாகவே நிறுவப்பட்டது. இதில் இணைவதற்கு நெதன்யாகு இணக்கத்தை வெளியிட்டபோதும் இந்த சபையில் துருக்கி மற்றும் கட்டார் நாடுகள் இணைக்கப்பட்டிருப்பது தொடர்பில் கவலையை வெளியிட்டு வருகிறார். இந்த இரு நாடுகளுக்கும் ஹமாஸ் அமைப்புடன் இருக்கும் உறவு காரணமாகவே இஸ்ரேல் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top