தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற உரிமை கிடைக்கும் வரை இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் மக்களுக்கு கரிநாள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (04.02.2026) இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் மக்களின் கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட போதே எமது இளைஞர், யுவதிகள் இனத்தின் விடுதலைக்காக ஆயுதமேந்தினார்கள். அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இலங்கை அரசு தமிழ் மக்களை ஒடுக்கப்பட்ட இனமாக வழிநடத்தி தொடர்ந்து உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.
இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என இதுவரை எந்த ஒரு அரசாங்கமும் கூறாத நிலையில் தொடர்ச்சியாக நாம் போராடி வருகிறோம். வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு பல போராட்டங்களை மேற்கொண்ட போதும் இராணுவம் தொடர்ந்தும் தமிழர் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் திராணி உள்ள நிலையில் இராணுவத்தை பாதுகாப்புக்காக வைத்திருக்கிறோம் என ஆட்சியாளர்கள் கதை விடுகிறார்கள்.
தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றம் பௌத்த விகாரை கட்டுவதற்கே இராணுவத்தை தமிழர் பகுதிகளில் வைத்திருக்கிறார்கள் என்பதை உண்மையான விடயம்.
தையிட்டியில் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் இராணுவத்தை வைத்து சட்டவிரோத திஸ்ஸ விகாரையை கட்டி முடித்து விட்டார்கள். யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு பகுதியில் இராணுவத்தை பயன்படுத்தி தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவது மற்றும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கே இராணுவ இருப்பு தேவைப்படுகிறது.
ஆகவே தமிழ் மக்கள் தருவதை பெற்றுக்கொண்டு இருக்கும் இனம் அல்ல எமது உரிமைகள் கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடுவோம். இலங்கையின் சுதந்திர நாள் எமது உரிமைகள் கிடைக்கும் வரை கரிநாளாகவே இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
