News

சீனாவில் இரசாயன நிறுவனத்தில் வெடிவிபத்து ; 08 பேர் உயிரிழப்பு

சீனாவின் வடக்கே ஷான்க்சி மாகாணத்தில் ஷான்யின் கவுண்டி பகுதியில் ஷூசோ நகரில் சனிக்கிழமை (07) அதிகாலை இரசாயன நிறுவனத்தில் வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிவிபத்தில் சிக்கி 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் உற்பத்தி பிரிவிலேயே திடீரென வெடி விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமை காலை முதற்கட்ட தேடுதலில் 05 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி நிலவரப்படி, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியதில் மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சட்டப்பூர்வ பிரதிநிதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து ஆராய ஷுவாசூ உள்ளூர் நிர்வாகம் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது.

“மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து மஞ்சள் நிற அடர் புகை வெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.”

சீனாவில் தொழில்மயமாக்கல் மிக வேகமாக நடைபெற்று வரும் வேளையில், போதிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததால் இது போன்ற தொழிற்சாலை விபத்துக்கள் தொடர்கதையாகி வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அண்டை மாகாணமான உள் மங்கோலியாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 09 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாகவும், விரைவில் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்படும் என்றும் சீன அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top