News

பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கிய பாகிஸ்தான்

 

 

பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல், மீண்டும் உலகை அதிர வைத்துள்ளது. இது, அந்நாடு இன்று எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சூழலின் அபாயகரமான நிலையை உலகிற்கு மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள தர்லாய் கலான் பகுதியில் உள்ள “கதீஜதுல் குப்ரா” பள்ளிவாசலில், வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஷியா முஸ்லிம்களை இலக்கு வைத்து இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டு, 169 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது 2008 ஆம் ஆண்டு மாரியட் ஹோட்டல் குண்டுவெடிப்புக்குப் பிறகு பாகிஸ்தான் தலைநகரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை குண்டுதாரியைத் தடுக்க முயன்றபோது, அவர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, பள்ளிவாசலுக்குள் நுழைந்து வழிபாட்டாளர்கள் மத்தியில் குண்டை வெடிக்கச் செய்ததாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கண்டனங்களும், பாதுகாப்பு அச்சங்களும்

தீவிரவாதிகளின் இந்த மனிதாபிமானமற்ற செயல் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானின் உயர்மட்ட ஷியா தலைவர் ராஜா அப்பாஸ் நசீர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மனித உயிர்களைப் பாதுகாப்பதில் அரசு நிர்வாகம் கடுமையான தோல்வியடைந்துள்ளது. இது சட்ட அமலாக்க நிறுவனங்களின் செயல்பாடு குறித்துக் கேள்விகளை எழுப்புகிறது, என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தூதர் ஜேன் மேரியட், இந்த வன்முறையை வெறுக்கத்தக்கது என்று கண்டித்துள்ளார். அதேபோல், பாகிஸ்தானில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

தலைநகரின் பாதுகாப்பு கேள்விக்குறி

தொடர்ந்து தலைநகரிலேயே இத்தகைய பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறுவது, பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில், இஸ்லாமாபாத் மாவட்ட நீதித்துறை வளாக நுழைவாயிலில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
செப்டம்பர் 2008 இல், மாரியட் ஹோட்டலில் லொரி மூலம் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாதம் ‘அரசியல் கருவியாக’ மாறிய வரலாறு
பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீதான இந்தத் தாக்குதல், ஒரு தனிப்பட்ட வன்முறைச் சம்பவம் அல்ல.மாறாக, இது பாகிஸ்தான் பல தசாப்தங்களாகப் பின்பற்றி வந்த தவறான கொள்கையின் விளைவாகும்.

1980இல் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகப் போரிடுவதற்காக ‘முஜாஹிதீன்’ குழுக்களைக் கட்டமைத்ததில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI) முக்கியப் பங்காற்றியது. அன்றிலிருந்து இன்றுவரை, பாகிஸ்தான் இராணுவம் தனது பிராந்திய மற்றும் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள, உள்நாட்டிலுள்ள மதவாத மற்றும் பயங்கரவாதக் குழுக்களைத் தூண்டிவிட்டு, அவர்களுக்கு ஆதரவும் பயிற்சியும் அளித்து ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறது.

“உங்கள் வீட்டுக் கொல்லைப்புரத்தில் பாம்புகளை வளர்த்துக்கொண்டு, அவை உங்கள் அண்டை வீட்டை மட்டும்தான் கடிக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.” என்ற அறிவுருத்தல் பாகி்ஸ்தானுக்கு சரியாக பொருந்திப் போகிறது.

லஷ்கர்-இ-தொய்பா (LeT) போன்ற அமைப்புகளை தனது பிராந்திய அரசியலுக்காக இந்தியாவுக்கு எதிராக வளர்த்துவிட்ட பாகிஸ்தான், இன்று அதேபோன்ற சித்தாந்தம் கொண்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் ஐஎஸ் (ISIS-K) போன்ற அமைப்புகளால் நிலைகுலைந்து போயுள்ளது.

சிதைந்துபோகும் சமூகக் கட்டமைப்பும் பொருளாதார வீழ்ச்சியும்
பயங்கரவாதத்தை வளர்ப்பது ஒரு நச்சுச் சுழல் என்பதை பாகிஸ்தானின் தற்போதைய சூழல் நிரூபிக்கிறது.

அந்நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் மத சகிப்புத்தன்மை என்பன முற்றிலுமாக அழிந்து போய் இருக்கிறது. மத சிறுபான்மையினர் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் 50% மேல் அதிகரித்துள்ளன. குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் போர்க்களமாக மாறியுள்ளன.

பாகிஸ்தான் பயங்கர பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அந்நிய முதலீடுகள் (FDI) மிகக் குறைவாக இருக்கின்றன. பயங்கரவாதத்திற்கு நிதி ஆதரவு அளிப்பதைத் தடுக்கத் தவறியதால், பாகிஸ்தான் நீண்ட காலம் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) ‘சாம்பல் பட்டியலில்’ (Grey List) இருந்தது. நிதி நடவடிக்கை பணிக்குழு என்பது உலகளவில் பணமோசடி, பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக கவனம் செலுத்தும் அரசுகளுக்கிடையேயான சர்வதேச அமைப்பாகும்.

பாகிஸ்தான் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு, பயங்கரவாதத்தை ஒழிக்காததே முக்கிய காரணமாகும்.

அரசின் தற்போதைய திண்டாட்டம்

பாகிஸ்தான் அரசு ஒருபுறம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறினாலும், மறுபுறம் தீவிரவாதக் குழுக்களுடன் சமரசம் செய்துகொள்வதும், அவர்களைத் தேர்தல் அரசியலில் ஈடுபடுத்துவதும் தொடர்கதையாக இருக்கிறது. பயங்கரவாத அமைப்புகள் இராணுவ நிலைகள், பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தும்போதும், தீர்க்கமான நடவடிக்கை எடுக்க அந்நாடு தயங்குவது அதன் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.

“பயங்கரவாதம் எங்கு இருந்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டும்” என்ற நேர்மையான கொள்கையை பாகிஸ்தான் எடுக்காதவரை, ஐஎஸ், தாலிபான் போன்ற அமைப்புகள் அந்நாட்டின் அமைதியைத் தொடர்ந்து சீர்குலைத்துக் கொண்டே இருக்கும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top