தெற்காசிய நாடான பங்களாதேசத்தின் புதிய அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்கின்றது.
கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் 209 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள பங்களாதேச தேசியவாதக் கட்சி 17 வருடங்களின் பின் மீண்டும் பங்களாதேசத்தில் ஆட்சிப் பொறுப்பை இன்று ஏற்கிறது. இவ்வைபவத்தில் பங்களாதேச தேசியவாதக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் மறைந்த காலிதா ஷியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார்.
2024 ஜுலையில் இடம்பெற்ற தொடர் இளைஞர் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை விட்டு விலகி நாட்டிலிருந்து வௌியேறி 18 மாதங்கள் கடந்த நிலையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பங்களாதேசம் தேசிய வாதக் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலின் முடிவுகள் பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டன. இந்நிலையில் பங்களாதேசம் தேசிய வாதக்கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்கும் பதவியேற்பு விழாவில் சுமார் 1,200 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று பங்களாதேச அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஜாதியா சங்க்சாத் பவானின் தெற்கு பிளாசாவில் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா இடம்பெறுகிறது. இந்நிகழ்வில் ஜனாதிபதி முகமது ஷாஹாபுதீன் பங்களாதேசத்தின் புதிய பிரதமராக பங்களாதேசம் தேசியவாதக் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் உட்பட புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவியேற்பு விழா நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு காலை 10.00 மணிக்கு இடம்பெறும் என்றுள்ள இடைக்கால அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் மாலை 4.00 மணிக்கு பதவியேற்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாகிஸ்தான் திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால், நேபாள வெளியுறவு அமைச்சர் பாலா நந்த சர்மா, மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல், இலங்கை சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, இங்கிலாந்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய பிரதிச் செயலாளர் சீமா மல்ஹோத்ரா உட்பட மேலும் சில நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்பதவி ஏற்பு வைபவத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
