ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை (28 ) ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் தலைநகர் தெஹரானில் பல்வேறு முக்கிய இடங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றுவரை ஈரானில் குறைந்தது 30 முக்கிய இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்களில் ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக கட்டிடங்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்களையும் இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
“The Shield of Judah” என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஈரானில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரானின் பதிலடி தாக்குதல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினால், இஸ்ரேலில் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கில் குவித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானில் உள்ள அமெரிக்கர்கள், பிரித்தானியர்கள் மற்றும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேறுமாறு அந்தந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் – இஸ்ரேல் மோதல் மத்திய கிழக்கில் பரவலான போராக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச சமூகம் தீவிரமாக கவனித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்கள் நிலைமையை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
