News

டோங்கா தீவு அருகே 7.6 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

 

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.6 ரிக்டராக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி மாலை நேரத்தில், சுமார் 237 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழம் குறைந்த பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் மேற்பரப்பில் வலுவாக உணரப்படும். இந்த நிலநடுக்கம், பூமிக்கு மிக ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் காரணமாக கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

டோங்காவின் தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாழ்வான பகுதிகளில் உள்ள அனைவரையும் உடனடியாக உயரமான இடங்கள் அல்லது நாட்டின் மத்திய பகுதிகளுக்கு செல்லுமாறு எச்சரித்துள்ளது. மேலும், பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்படும் வரை மக்கள் கடற்கரைகள், கடலோரப் பகுதிகள் மற்றும் தாழ்வான கடலோரப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளது.

டோங்கா என்பது பாலினேசியாவில் உள்ள 171 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். இந்தத் தீவு நாடு, நியூசிலாந்திலிருந்து சுமார் 1,800 கிலோமீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ளது. இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் டோங்கடாபு என்ற பிரதான தீவில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top