News

பேச்சுவார்த்தை தோல்வி: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

 

 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான நேற்று நடத்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

21 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியால் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது. ஈரான் பிரதிநிதிகளும் புறப்பட்டனர்.

ஏற்றுமதிக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுப்பது, அணுஆயுத தயாரிப்பை கைவிடுவது உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் பதிவில், “ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதாக உறுதியளித்துவிட்டு, வேண்டுமென்றே அதைச் செய்யத் தவறிவிட்டது. இது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் நாடுகளுக்கும் இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் கடற்படை மற்றும் பெரும்பாலான கண்ணிவெடி பதிக்கும் கப்பல்கள் ஏற்கனவே முழுமையாக அழிக்கப்பட்ட போதிலும், கடலில் கண்ணிவெடிகள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இது உண்மையாக இருக்கலாம், ஆனால் எந்தக் கப்பல் உரிமையாளர் இந்த ஆபத்தை ஏற்கத் துணிவார்? ஈரானுக்கும், அதன் எஞ்சியிருக்கும் தலைவர்களுக்கும் இது ஒரு நிரந்தர அவமானம்.

ஈரானுடனான இந்தப் பேச்சுவார்த்தை விடியற்காலை தொடங்கி இரவு முழுவதும் சுமார் 20 மணி நேரம் நீடித்தது. பல விஷயங்களில் இணக்கம் காணப்பட்டாலும், முக்கியமான ஒரே விஷயம் – ஈரான் தனது அணுசக்தி இலட்சியங்களைக் கைவிடத் தயாராக இல்லை.

ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பிடிவாதமாக உள்ளது. நான் பல ஆண்டுகளாகச் சொல்லி வருவது போல: ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது.

ஈரானின் இந்தச் செயல் உலகத்திற்கு விடுத்த மிரட்டல். அமெரிக்கா ஒருபோதும் மிரட்டலுக்குப் பணியாது. எனவே, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பின்வரும் உத்தரவுகளை நான் பிறப்பித்துள்ளேன்.

உலகின் மிகச்சிறந்த அமெரிக்க கடற்படை, ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் முற்றுகையிடும் பணியைத் தொடங்கும். இந்த முற்றுகையில் பிற நாடுகளும் ஈடுபடும்.

கட்டணம் செலுத்துபவர்களுக்குப் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படாது.

ஈரான் பதித்துள்ள கண்ணிவெடிகளை நமது கடற்படை அழிக்கும் பணியைத் தொடங்கும்.

நமது படைகள் மீதோ அல்லது அமைதியாகச் செல்லும் கப்பல்கள் மீதோ எந்த ஈரானியராவது துப்பாக்கிச் சூடு நடத்தினால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ரேடார் அமைப்புகள் ஏற்கனவே செயலிழந்துவிட்டன. காமேனி உள்ளிட்ட அவர்களின் பெரும்பாலான தலைவர்கள் இறந்துவிட்டனர்.

இதற்கெல்லாம் காரணம் அவர்களின் அணுசக்தி மோகம் தான்.

ஈரான் தனது சட்டவிரோத மிரட்டல் மூலம் லாபம் ஈட்ட அனுமதிக்கப்பட மாட்டாது. எஞ்சியிருக்கும் ஈரானை முழுமையாக அழிப்பதற்கு எங்களது ராணுவம் தாக்குதல் நடத்த தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என்ற டிரம்ப் உத்தரவு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஈரான் ராணுவ ரீதியாக எதிர்வினை ஆற்றினால் முழு அளவிலான போர் மீண்டும் மூழும் என அஞ்சப்படுகிறது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top