News

ஹெய்ட்டியில் சனநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு 

 

 

ஹெய்ட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர சனநெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹெய்ட்டியின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஜான் ஹென்றி பெட்டிட் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் உள்ள லாபெரியர் சிட்டடெல் கோட்டையிலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரான்ஸிடம் இருந்து ஹெய்ட்டி சுதந்திரம் பெற்ற சில காலத்திலேயே இந்தக் கோட்டை கட்டப்பட்டது.

யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலமான இந்தக் கோட்டை, ஹெய்ட்டியின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். சனிக்கிழமையன்று இந்தக் கோட்டையின் வருடாந்த கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்பதற்காக ஏராளமான மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்திருந்தனர்.

அளவுக்கு அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் கோட்டைக்குள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த பலர்  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டுப் பிரதமர் அலிக்ஸ் டிடியர் பில்ஸ்-ஐம்  தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top