News

காலநிலை மாற்றம், வெப்ப அலை தீவிரம்; உலகெங்கும் காட்டுத்தீயால் பேரழிவுகள்

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகில் பல கண்டங்கள் மற்றும் நாடுகளில் பரவிய காட்டுத் தீயால் பெருமளவு காடுகள் எரிந்து நாசமானதுடன், வீடுகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் தீயால் அழிந்த போயுள்ளன.

ஒப்பீட்டளவில் முன்னைய ஆண்டுகளை விட அதிகரித்த வெப்ப அலைகள், வறட்சி மற்றும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் இந்த ஆண்டு காட்டுத் தீயால் உலகெங்கும் பேரழிவுகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசியா

தென்கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில், கடலோர மாவட்டமான உல்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தால் ஹனுல் அணுமின் நிலையத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் இங்கு பரவத் தொடங்கிய தீயால் சுமார் 42,008 ஏக்கர் காடுகள் எரிந்து அழிந்தன. அத்துடன், 7,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டதாக நாசாவின் புவி கண்காணிப்பு சேவை தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்காவில் லாராச்சி (Larache), ஒவ்சான் (Ouezzane), டெட்டூனே (Tetouane) மற்றும் தாசா (Taza) மாகாணங்களில் பரவிய காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 5,000 ஏக்கர் காடுகள் எரிந்து அழிந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர் மற்றும் ஒருவர் உயிரிழந்தார்.

ஐரோப்பா

பிரான்ஸின் தென்மேற்கு ஜிரோண்டே பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் ஜூலை 19 நிலவரப்படி சுமார் 47,700 ஏக்கர் காடுகள் எரிந்து அழிந்தன. சுமார் 34,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

கிரீஸில் ஜூலை 19 அன்று ஏதென்ஸுக்கு வடக்கே 27 கி.மீ. (16 மைல்) தொலைவில் காட்டுத் தீ ஏற்பட்டது. ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள மெகாரா நகருக்கு அருகிலும், சலாமினா தீவிலும் இக்காட்டுத் தீ வேகமாக பரவியது.

இத்தாலியில், ஜூலை 20-ஆம் திகதி கார்சோ அருகே காட்டுத் தீ பரவி, ஸ்லோவேனியா வரையிலும் விரிவடைந்தது. இங்கு ஜூலை 21 வரை 5,000 ஏக்கருக்கு மேல் காடுகள் எரிந்தன.

ஜூலை 19முதல் டஸ்கனியில் பற்றியெரியும் தீயால் ஜூலை 20 வரை 1,606 ஏக்கர் அழிக்கப்பட்டன. சுமார் 500 பேர் வெளியேற்றப்பட்டனர். அங்கு சில திரவ எரிவாயு தொட்டிகள் வெடித்தன.

போர்த்துக்கல்லில், முர்கா நகராட்சி முழுவதும் பரவிய காட்டுத் தீயால் சுமார் 24,711 முதல் 29,653 ஏக்கர் வரை எரிந்தன. இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஸ்பெயினில், ஜூலை 19 நிலவரப்படி 30 க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. காஸ்டில் மற்றும் லியோன் மற்றும் கலீசியாவில் பெரும் தீ பரவி அழிவுகளை ஏற்படுத்தியது.

வட அமெரிக்கா

கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஜூலை 14 முதல் பற்றி எரியும் காட்டுத்தீயால் கிட்டத்தட்ட 2,000 ஏக்கர் காடுகள் எரிந்து அழிந்தன. இங்கு பெருமளவில் பழங்குடி மக்கள் உள்ளிட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அமெரிக்காவில், கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்காவின் ஒரு பகுதியில் ஜூலை 8ஆம் திகதி காட்டுத் தீ பரவல் தொடங்கியது. இதனால் இங்குள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான ராட்சத செக்வேயா மரங்கள் ஆபத்தில் உள்ளன. ஜூலை 13 நிலவரப்படி கலிபோர்னியாவில் காட்டுத் தீயால் 3,772 ஏக்கர் காடுகள் எரித்துள்ளன.

ஏப்ரல் 17 அன்று, அரிசோனாவில் எரிபொருள் குழாயில் ஏற்பட்ட தீயினால் 20,000 ஏக்கருக்கு மேல் காடுகள் எரிந்தன. 2,100 க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்தனர்.

நியூ மெக்சிகோவில் இவ்வாண்டில் ஜூலை 15 நிலவரப்படி 341,735 ஏக்கர் எரிந்து அழிந்துள்ளன. சான் மிகுவல் மற்றும் சான்டா பே மாவட்டங்களில் உள்ள ஹெர்மிட்ஸ் காட்டுத்தீ மற்றும் கால்ப் கேன்யன் காட்டுத்தீ ஆகியவற்றின் இணைப்பே இன்று வரை மிகப்பெரிய தீப்பரவலாக பதிவாகியுள்ளது.

ஹெர்மிட்ஸ் தீப்பரவல் ஏப்ரல் 6 அன்று தொடங்கியது. கேன்யன் தீப்பரவல் ஏப்ரல் 19 அன்று தொடங்கியது.

தென் அமெரிக்கா

தென் அமெரிக்கா – அர்ஜென்டினாவில், பராகுவேயின் எல்லைகளுக்கு அருகில் உள்ள கொரியண்டஸ் மாகாணத்தில் கொரியண்டஸ் காட்டுத்தீ கடந்த பெப்ரவரியில் தொடங்கி, சுமார் 2,223,948 ஏக்கர் இயற்கை காடுகளை அழித்தது. இதனால் ஆயிரக்கணக்கான காட்டு விலங்குகள் இடம்பெயர்ந்துள்ளதுடன், பெருமளவு காட்டு விலங்குகளும் உயிரிழந்தன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top