News

காலிமுகத்திடல் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் விசாரணை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்

 

 

இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் மற்றும் காலிமுகத்திடல் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைய நாட்களில் பதிவான பல நபர்களின் மரணத்துக்குக் காரணமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

அத்துடன், கரையோரப் பகுதிகளில் குறிப்பாக காலிமுகத்திடலை அண்மித்த பகுதிகளில் சடலங்கள் கரையொதுங்குவது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பிலும் அச்சங்கம், பொலிஸ்மா அதிபரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு

இவை தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து எந்த விளக்கமும் கிடைக்காத நிலையில், இதுபோன்ற சடலங்கள் கரையொதுங்குவது பொதுமக்களின் ஒரு பிரிவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியதை அவதானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கை பேணப்படுவதையும், இலங்கையின் நற்பெயருக்குப் பாதகமான பாதிப்பு ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கு இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டியதன் அவசியத்தைப் பொலிஸ்மா அதிபருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top