News

களனி பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பலர் கைது

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து பொலிஸாரால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மாணவர்களின் போராட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் சிலர் ஆதரவை வழங்கி,பொலிஸாருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தமைக்காக பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுப்பதற்காகவும் மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டக்காரர்கள் செயற்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

களனி பல்கலைக்கழத்திற்கு முன்பாக சற்று முன் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே பொலிஸார் தடை உத்தரவொன்றினை கொண்டு வந்து மாணவர்களிடம் கையளித்த போது அங்கு ஒரு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

என்ற போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த தடை உத்தரவினை ஏற்க மறுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top