காசா மீதான இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்கள் நேற்றும் நீடித்ததோடு சிறுவர்கள் உட்பட பலரும் கொல்லப்பட்டு அங்குள்ள மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலின் குண்டு மழையால் 62 பேர் கொல்லப்பட்டு மேலும் 296 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிலும் நேற்று (25) அதிகாலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் 7 சிறுவர்கள் உட்பட குறைந்தது 23 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வின் பல பகுதிகளிலும் கடும் பீரங்கி தாக்குதல்கள், செல் மற்றும் வான் தாக்குதல்களும் இடம்பெற்றதாக அங்கிருக்கும் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கான் யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இரு கூடாரங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய காசாவின் புரைஜில் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் மேலும் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காசா நகர் மற்றும் ஜபலியா உட்பட வடக்கு காசாவிலும் உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் வடக்கு காசாவில் இருக்கும் பெயித் லஹியாவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் மூன்று வயது சிறுமி உட்பட மூவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக காசாவில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே காசாவில் பெரிதும் அறியப்பட்ட அல் ஜசீரா செய்தியாளர் ஹொசம் ஷபாத்தும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். பெயித் லஹியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து ஷபாத் தனது வாகனத்திற்கு அருகே மேலும் பல சடலங்களுடன் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவரது கொலைக்கு எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அவர் இலக்காகக் கூடும் என்று முன்னதாக எச்சரித்திருந்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ‘கடந்த 15 மாதத்தில் பணியில் இருந்தபோது 45 பேர் உட்பட சுமார் 200 ஊடகவியாளர்களின் கொலைக்கு இஸ்ரேல் இராணுவம் பொறுப்பு வகிப்பதாக அந்த அமைப்பு கூறியது.
காசாவில் கடந்த இரண்டு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தத்தைத் தொடர்ந்தே கடந்த வாரம் இஸ்ரேல் தனது உக்கிர தாக்குதல்களை ஆரம்பித்தது. அது தொடக்கம் இதுவரை 792 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 1,663 பேர் காயமடைந்திருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதில் கடந்த ஒரு வாரத்தில் காசாவில் 270 இற்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சேவ் த சில்ட்ரன் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக காசாவில் போர் ஆரம்பித்ததில் இருந்து அதிக சிறுவர்கள் கொல்லப்பட்ட நாட்களும் இதில் அடங்குவதாக அது கூறியது.
‘மருத்துவமனைகள் மீது குண்டுகள் விழுந்து சிறுவர்கள் கொல்லப்பட்டபோதும் உலகம் அமைதி காக்கிறது’ என்று காசாவில் சிறுவர்களை பாதுகாப்போம் மனிதாபிமான பணிப்பாளர் ரசேல் கம்மின்ஸ் குறிப்பிட்டுள்ளார். ‘உதவியில்லை, பாதுகாப்பு இல்லை, எதிர்காலமும் இல்லை’ என்று காசாவின் நிலை குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், காசாவில் போர் மீண்டும் ஆரம்பித்தது சிறுவர்களுக்கான மரண தண்டனையாக மாறி இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. 2023 ஒக்டோபரில் போர் ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் 17,900க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 50,144 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களே பெரும்பான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காசாவில் உள்ள மக்களை வெளியேறும் புதிய உத்தரவுகளை இஸ்ரேல் இராணுவம் நேற்று பிறப்பித்தது. வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல் இடம்பெற்றிருப்பதால் ஜபலியா, பெயித் லஹியா, பெயித் ஹனூன் மற்றும் ஷுஜையி பகுதிகளின் புதிய தாக்குதல்களை நடத்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தென் காசாவின் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரிலும் வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
காசாவில் பாதுகாப்பான இடங்கள் இல்லை என்றும் மனிதாபிமான வளங்கள் மற்றும் முகாம்களிலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் பல உதவிக் குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் கூறி வருகின்றன.