கனடாவில் பதவிக் காலத்திற்கு முன் பாராளுமன்றத்தை கலைக்க முடிவு

கனடா பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நிறைவடைகின்ற போதிலும் அதற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் ஒட்டோவாவிலுள்ள ரிடோ ஹோலில் ஆளுநர் நாயகம் மேரி சைமனை சந்தித்த பிரதமர் கார்னி, பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க பரிந்துரை செய்தார். அதற்கேற்ப ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தலை நடத்த ஆளுனர் நாயகம் ஒப்புதல் அளித்துள்ளார்.
கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடா பொதுமக்கள் மத்தியில் புதிய பிரதமருக்கு ஆதரவு பெருகி வருவதும் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான காரணங்களில் ஒன்று எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கனடாவின் புதிய பிரதமர், ‘அமெரிக்கா கனடாவை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறது.
ட்ரம்ப் எம்மை பிரிக்க நினைக்கிறார். அதை நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் கனடா உள்ளது. இது போன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழி நடத்த வேண்டும் என்பதில் கனடா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.