கனடாவுடனான வர்த்தகப் போரினால் அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று புதிய பகுப்பாய்வு ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கனேடிய வர்த்தக சபை வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், அமெரிக்காவில் அதன் வடக்கு அண்டை நாடான கனடாவுடனான ஏற்றுமதியை அதிகம் சார்ந்துள்ள பகுதிகளை பட்டியலிட்டுள்ளது.
மட்டுமின்றி, பெரும்பாலான இந்த நகரங்களே டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளித்துள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது சர்ச்சைக்குரிய வரி விதிப்புகளால் அவர் எடுக்கும் சாத்தியமான அரசியல் ஆபத்தின் அறிகுறி இதுவென்றும் கனேடிய வர்த்தக சபை சுட்டிக்காட்டியுள்ளது.
டெக்சாஸின் சான் அன்டோனியோ மற்றும் மிச்சிகனின் டெட்ராய்ட் உள்ளிட்ட 41 அமெரிக்க பெருநகரப் பகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கார்களுக்கு வரி விதிப்பதன் ஊடாக அமெரிக்காவில் கார் தயாரிப்புத்துறை செழிக்கும் என்றே ட்ரம்ப் வாதிடுகிறார்.
ஆனால், சான் அன்டோனியோ நகரம் முன்னெடுக்கும் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதி, விண்வெளி சார்ந்த, வாகனம் மற்றும் எரிசக்தி துறை சார்ந்த அனைத்தும் கனடாவையே சார்ந்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையால் இயங்கும் டெட்ராய்ட் பகுதியின் ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் கனடாவிற்கு செல்கிறது. கனடாவுடனான வர்த்தகப் போரினால் பாதிக்கப்படும் நகரங்களில் மில்வாக்கி மற்றும் பிட்ஸ்பர்க் ஆகியவை முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
கனடாவிற்கான ஏற்றுமதியை அதிகம் நம்பியுள்ள பிற நகரங்களில் கன்சாஸ் நகரம், மிசோரி; லூயிஸ்வில்லி, கென்டக்கி; நாஷ்வில்லி, டென்னசி; கொலம்பஸ், ஓஹியோ; சிகாகோ; மற்றும் கிளீவ்லேண்ட் ஆகியவை அடங்கும்.
இதில் பெரும்பாலான நகரங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.