ஜோ பைடன் ஆட்சியின் போது அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்க அனுமதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஜனவரி முதல் CBP One செயலியைப் பயன்படுத்தி 900,000 க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுவாக பரோல் எனப்படும் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் பணிபுரியும் அங்கீகாரத்துடன் இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது இந்த மக்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற ட்ரம்ப் நிர்வாகம் ஆணையிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ள உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை,
ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த சிறப்பு சலுகைகளை ரத்து செய்வது, நமது எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் ஒருபகுதியாகும் என குறிப்பிட்டுள்ளது.
CBP One செயலியைப் பயன்படுத்திய அனைவருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், ஆனால் எண்ணிக்கை மட்டும் வெளியிட மறுத்துள்ளனர்.
மேலும், அதே CBP One செயலியைப் பயன்படுத்தி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டுள்ளனர். மட்டுமின்றி, தொடர்புடைய புலம்பெயர்ந்தோர் வெளியேற மறுத்தால், கடுமையான சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
அதாவது அவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ள நாள் காலாவதியானதன் பின்னர் ஒவ்வொரு நாளுக்கும் 998 டொலர் அபராதமாக செலுத்த நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
மேலும், இந்த அபராதங்கள் அமெரிக்காவில் நாடுகடத்தல் உத்தரவுகளை எதிர்கொள்ளும் 1.6 மில்லியன் புலம்பெயர்ந்தோருக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படுகிறது. அத்துடன் அபராதத் தொகையை செலுத்த மறுப்பவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.