காசா நகரின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றே தாக்கப்பட்டிருப்பதோடு இதில் மேலும் பலரும் காயமடைந்திருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் தொடர்ந்து பலரும் காணாமல்போயிருக்கும் நிலையில் அவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலால் அருகில் இருக்கும் மேலும் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு 80 பேர் வரை காணாமல்போயிருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் உயிர்ச்சேதம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
வடக்கு காசாவின் ஷுஜையீயில் இருந்து தாக்குதல்களுக்கு திட்டமிடுவது அதனை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான மூத்த ஹமாஸ் போராளி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
தாக்குதலுக்கு முன்னர் பொதுமக்களின் பாதுகாப்புக்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.
சுஜையாவில் படை நடவடிக்கையை முன்னெடுக்கவிருப்பதால் அங்கிருக்கும் பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் நான்கு மாடி கட்டடம் மீதான இந்தத் தாக்குதல் பாரிய அளவில் இருந்ததாக சுஜையீ குடியிருப்பாளரான 26 வயது அயூப் சலீம் விபரித்துள்ளார். ‘கூடாரங்கள், இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் வீடுகள் நிரம்பி இருந்த பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக’ அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
‘உலோகத் துண்டுகள் அனைத்து பக்கங்களிலும் பறந்தன. பயங்கரமாகவும் விபரிக்க முடியாத வகையிலும் இருந்தது. மண் மற்றும் பாரிய இடிபாடுகள் ஒட்டுமொத்த பகுதியையும் மூடியுள்ளது. எம்மால் எதனையும் பார்க்க முடியவில்லை. மக்களின் கூச்சல் சத்தங்களை மாத்திரமே கேட்க முடிகிறது’ என்று குறிப்பிட்டிருக்கும் சலீம், உடல் பாகங்கள் சிதறுண்டு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு காசா சிவில் பாதுகாப்பு நிறுவன பணியாளர்கள் விரைந்தபோதும் இடிபாடுகளில் இருக்கும் ஒரு சிலரை மாத்திரமே மீட்க முடிந்துள்ளது. ‘தாம் பாதுகாப்பாக இருப்பதாக நம்பி பலரும் இந்த வீட்டில் தங்கி இருந்தனர். அது அவர்களின் தலை மீதே விழுந்துவிட்டது’ என்று இப்ராஹிம் ரஷீத் என்பவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
காசாவின் மேலும் பல பகுதிகளிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் ஒன்பது பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் காசாவில் நேற்று அதிகாலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை நெருங்கி 50,846 ஆக அதிகரித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் இரண்டு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தம் கடந்த மார்ச் முதலாம் திகதி முடிவுக்கு வந்த நிலையில் கடந்த மார்ச் 18 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் அங்கு தனது பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
காசாவுக்கான அனைத்து உதவிகளையும் முடக்கியே இஸ்ரேல் அங்கு மீண்டும் போரை நடத்தி வருகிறது.
காசாவில் ‘உதவிகள் தீர்ந்து பயங்கரத்தின் கதவு திறக்கப்பட்டிருக்கிறது’ என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார்.
‘காசா ஒரு கொலைக்களமாக இருப்பதோடு பொதுமக்கள் முடிவில்லாத உயிரிழப்புகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளனர்’ என்று அவர் கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
பலஸ்தீன மக்களுக்கான உணவு மற்றும் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யும்படி ஆறு ஐ.நா. நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்தே குட்டரஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்