பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் முன் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு தீ வைத்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
பிரான்சில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இரவில் பல்வேறு சிறைகள் முன் நிறுத்தப்பட்டிருந்த சிறை அலுவலர்களின் 21 கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
கார்களில் சில தீவைத்து நாசம் செய்யப்பட்டிருந்தன. துப்பாக்கிக் குண்டுகளும் பாய்ந்திருந்தன.
நேற்றும் டராஸ்கான் நகரில் உள்ள சிறைச்சாலைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்களுக்கு தீ வைக்கப்பட்டிருந்தது.
மேலும் தெற்கு பிரான்சிலுள்ள ஏக்ஸ்-என் நகரிலும் சிறையில் பணியாற்றும் ஓரு போலீசாரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காருக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் ஜெரால்டு தார்மேனியன் கூறியதாவது:
போதைக் கடத்தல் கும்பல்கள் மீது பிரான்ஸ் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இவ்வாறு தாக்குதல் நடத்துவது தொடர்பான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஜெரால்டு தார்மேனியன் கூறினார்.