ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை திருப்பி அனுப்பும் திட்டம் குறித்து பிரித்தானியாவும் பிரான்சும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த திட்டம் குறித்து பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர், இந்த புதிய திட்டத்தின்படி, பிரான்சிலிருக்கும் பிரித்தானியர்களின் குடும்பத்தினர் சட்டப்படி பிரித்தானியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
அதற்கு பதிலாக, சட்டவிரோதமாக ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரை பிரான்ஸ் திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
பிரித்தானிய புலம்பெயர்தல் ஆய்வாளரான பீற்றர் வால்ஷ் என்பவர் இத்திட்டம் குறித்து கூறும்போது, எத்தனை சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் இத்திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்ப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இத்திட்டம் எந்த அளவுக்கு பலன் அளிக்கிறது என்பது தெரியவரும் என்று கூறியுள்ளார்.
அதாவது, நாம் அதிக அளவில் புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பினால், இத்திட்டம் நல்ல பலனைத் தரலாம் என்கிறார் அவர்.