இல்லினாய்ஸ், சாத்தமில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில், குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் சாத்தமில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வீடு திரும்பி கொண்டிருந்த போது, பள்ளி வளாகத்தில் அதிவேகமாக கார் ஒன்று புகுந்தது. கார் மோதியதில் குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்கள் 4 முதல் 18 வயதிற்குள் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்துக்கான காரணமாக குறித்து விசாரணை நடந்து வருகிறது. பள்ளி முடிந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இல்லினாய்ஸ் கவர்னர் ஜே.பி.பிரிட்ஸ்கர் கூறியதாவது: இன்று சாத்தமில் நடந்த விபத்தில் குழந்தைகள் இறந்துள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்து உள்ளனர். இதனை கேட்டு நான் வருத்தம் அடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.