அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததை அடுத்து, உக்ரைனுக்கு எதிரான போரை மே 8 முதல் 10ம் தேதி வரை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
‘உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் தீவிர பேச்சு நடத்தி வருகிறார்.
முழுமையான போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா பல நிபந்தனைகள் விதித்த நிலையில், அதை உக்ரைன் ஏற்காததால் பேச்சில் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த டிரம்ப், ‘போரை நிறுத்த புடின் விரும்பவில்லை என எண்ணுகிறேன்’ என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை தற்காலிக போர் நிறுத்தம் செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதில், ‘மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு எதிரான அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், மே 8 முதல், 10ம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் தரப்பு இதை பின்பற்றும் என ரஷ்யா நம்புகிறது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக சமீபத்தில் குர்ஸ்க் பகுதியில் தாக்குதல் நடத்திய வடகொரிய வீரர்களுக்கு, ரஷ்ய அதிபர் புடின் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், ‘ரஷ்ய போராளிகளுடன் தோளுக்கு தோளாக நின்று தாக்குதலுக்கு உதவிய வடகொரிய வீரர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு நன்றி’ என, தெரிவித்துள்ளார்.