News

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தும் உக்கிரம்: 103 பேர் பலி – பயங்கர தாக்குதலுக்கு மத்தியில் போர் நிறுத்த பேச்சிலும் முன்னேற்றமில்லை

 

காசாவில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் அங்கு பெண்கள் மற்றும் சிறுவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மேலும் 103க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 19 மாதங்களாக நீடிக்கும் மோதல்களில் பாரிய மனிதாபிமான பேரழிவு ஒன்று இடம்பெற்றிருக்கும் நிலையில் இஸ்ரேல் மீண்டும் ஒரு முறை தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது சியோனிச துணை இராணுவக் குழுக்களால் 750,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட 77ஆவது நக்பா அல்லது பேரழிவு தினத்தை பலஸ்தீனர்கள் அனுஷ்டிக்கும் நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

தெற்கு நகரான கான் யூனிஸில் கடந்த புதன் இரவு தொடக்கம் இடம்பெற்று வரும் சரமாரி தாக்குதல்களில் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவிந்திருப்பதாகவும் அவர்களில் சிறுவர்கள் பலர் இருப்பதாகவும் நாசர் மருத்துவமனை ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். காசாவின் வடக்கே காசா நகர் மற்றும் ஜபலியாவிலும் இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தியுள்ளது.  குறிப்பாக கான் யூனிஸில் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி ஒன்பது வீடுகள் மீது நேரடி தாக்குதல்களை நடத்திய இருப்பதாக அங்குள்ள அல் ஜசீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதில் ஒட்டுமொத்த குடும்பங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘இரவு முழுவதும் இஸ்ரேலின் செல் குண்டுகள் விழுந்தன’ என்று வடக்கு காசாவைச் சேர்ந்த 43 வயது ஆமிர் செல்ஹா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். ‘மக்கள் மற்றும் கூடாரங்கள் நிரம்பியுள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் செல் குண்டுகளை நாள் முழுவதும் வீசியது’ என்று அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களில் ஹசன் சமூர் என்ற ஊடகவியலாளரும் உள்ளார். அவர் ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்படும் அக்ஸா வானொலியில் பணியாற்றுபவராவார். அவரது வீடு தாக்கப்பட்ட நிலையில் 11 குடும்ப உறுப்பினர்களுடன் அவர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காசாவில் இந்த புதிய தாக்குதல்கள் அங்க மீண்டும் ஒருமுறை மக்கள் வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் மக்களை வெளியேறும்படி விடுத்த அவசர உத்தரவை அடுத்து காசா நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டு, கட்டாரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மறைமுக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் சூழலிலேயே காசாவில் தாக்குதல்கள் உக்கிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘தாக்குதல்களில் மறைந்து நின்று பேச்சுவார்த்தைகளை நடத்த இஸ்ரேல் தீவிரமாக முயல்கிறது’ என்று ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது. கட்டாரில் இடம்பெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதுவர்கள் இணைந்துள்ளதோடு கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க தயார் என்று ஹமாஸ் அமைப்பு கூறியபோதும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கே ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்தப் போர் ஹமாஸை ஒழிப்பதன் மூலம் மாத்திரமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தையை சரியான வழிக்கு கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபடும்போது, சியோனிஸ ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல்) அந்த முயற்சிக்கு பதில் அழிக்கும் வகையில் அப்பாவி பொதுமக்கள் மீது இராணுவ அழுத்தத்தை செய்கின்றனர்’ என்று ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு முடிவற்ற போர் ஒன்றையே விரும்புவதோடு அவரது பணயக்கைதிகள் தொடர்பில் அவர் கவலைப்படவில்லை’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘காசாவில் இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி இருப்பதன் காரணமாக டோஹா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எட்டப்படவில்லை’ என்று பேச்சவார்த்தை தொடர்பில் அறிந்த பலஸ்தீன அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசாவுக்கான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் முடக்கி இருப்பதோடு ஆறு வார போர் நிறுத்தத்தின் பின் கடந்த மார்ச் 18 ஆம் திகதி மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. கடந்த 2023 ஒக்டோபர் தொடக்கம் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 53,000ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்க ஆதரவு தன்னார்வ தொண்டு நிறுவனமான காசா மனிதாபிமான அமைப்பு இஸ்ரேலுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த மாதத்தில் காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை ஆரம்பிக்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

வடக்கு காசாவில் பாதுகாப்பான விநியோக இடங்களை இஸ்ரேலிடம் கோரி இருப்பதாகவும் அதற்கு இஸ்ரேல் இணங்கியதாகவும் இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் காசாவுக்கான உதவி விநியோகங்களை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கையாள்வது தொடர்பில் ஐ.நா. மற்றும் தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தமூன் பகுதியில் நேற்று இடம்பெற்ற சுற்றுவளைப்பில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வீடு ஒன்றை முற்றுகை இட்டே ஐந்து இளம் பலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றதாக அந்த பகுதியின் மேயர் சமீர் கட்டைசாட் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top