முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக நினைவு கூறப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த தங்கள் உறவுகளுக்காக தங்களை தாங்களே ஆற்றுப்படுத்த மே12 தொடக்கம் 18 வரை முள்ளிவாய்க்கால் நிகழ்வு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு நினைவு கூறப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நினைவேந்தல் வடகிழக்கில் பல்வேறு பிரதேசங்களில் கஞ்சி வழங்கி நினைவு கூறப்படுகிறது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட இதனை செய்து வருகின்ற போதும் பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் கடந்த கால அரசாங்கம் இதனை செய்ய விடாது ஒரு சிலரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்த வரலாறும் உண்டு.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் (Mullivaikkal Remembrance Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் மே 18-ஆம் திகதி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் சமூகத்தினரால், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த நாளாகவும், அதன் இறுதிக் கட்டத்தில் பலியானவர்களை நினைவுகூரும் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 15 வருடங்களாக, மே மாதம் 18ஆம் திகதி, ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம்’ ஈகைச் சுடரேற்றி நினைவுகூரப்பட்டு வருகின்றது. இவ்வாறான நினைவேந்தல்கள் தமிழர் தாயகத்தின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறான நினேவேந்தல் குறித்து வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்க தலைவி செபஸ்டியன் தேவி தெரிவிக்கையில் ” இன்று 30 வருட கால கோர யுத்தத்தால் தமிழர்களாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதுடன் இன அழிப்பை சந்தித்துள்ளோம் .
இறுதி யுத்தத்தின் போது பட்டினி சாவை சந்தித்துள்ளோம் மே 12 ல் இருந்து அடையாளங்களை உள்வாங்கி செய்கிறோம் இதன் மூலம் எங்கள் உறவுகளின் உயிர்களை 4 இலட்சத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் சிறுவர்கள் உட்பட.
இதற்கு இலங்கை அரசே பொறுப்புக் கூற வேண்டும் இதற்கான நீதியை அரசாங்கமே வழங்க வேண்டும் இன அழிப்புக்கான நீதியை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இதனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூறி வருகிறோம் எமது காணாமல் போன உறவுகள் வவுனியாவில் தொடர் போராட்டங்களை உறவுகளுக்காக வேண்டி நடாத்தி வருகின்ற நிலையில் சுமார் 3000 நாட்களே எட்டியபோதும் அரசாங்கமோ சர்வதேசமோ தீர்வு வழங்கவில்லை நீதிக்காகவே போராடும் நாங்கள் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் அவர்களை நினைவு கூறுகிறோம் ” என்றார்.
முள்ளிவாய்க்கால் ஈகைச்சுடர் ஏற்றல் என்பது, அழித்தாலும் அழியமாட்டோம்; வீழ்த்தினாலும் விழமாட்டோம்; மாற்று வடிவத்தில் மாற்றுச் சக்தியாக எழுச்சி பெறுவோம் என்பதை அடையாளப்படுத்தி நிற்கவேண்டும்.
ஏனெனில், முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதப்பேரவலம், தமிழினத்தின் மீதான இனவழிப்பின் ஆரம்பமோ, முடிவோ அல்ல; நீண்ட காலமாக, தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நடத்தப்படும் இனஅழிப்பின் ஓர் அங்கம் மட்டுமேயாகும்.
கஞ்சி வழங்குவதனை கூட தடை செய்யும் அளவுக்கு அரச துறை புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டு உரிமைகளை பறிக்கிறார்கள் யாழில் தையிட்டு விகாரை பகுதியிலும் இந்த நிகழ்வு அரங்கேறிய போது பல துயர்களை சந்தித்து வருகின்றனர் இது போன்று மட்டக்களப்பிலும் இதே நிலையை சந்திக்க வேண்டியுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது தங்கள் உயிரை பாதுகாக்க உப்பில்லா கஞ்சியை அருந்தினார்கள் இதனை வரலாற்றில் நினைவு கூறுகின்றனர். இதை கடந்த கால அரசாங்கம் தடை செய்தனர் தற்போதைய நிலையில் இந்த அரசாங்கம் இதனை அனுமதிக்க வேண்டும் நாங்கல் பட்ட வலி வேதனைகளை தமிழன் இருக்கும் வரைக்கும் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டே இருக்கும்.
இது போன்று காணாமல் போன உறவுகளுக்காக இந்த தருணத்தில் முடிவுகள் வேண்டும். இதனை சர்வதேசம் புரிந்து நீதியை பெற்றுத் தர வேண்டும் என்பதுடன் எங்கள் உயிர்காத்த கஞ்சியை போராட்டத்தின் வடிவமாக இனவழிப்பின் தேடலின் ஒரு கருவியாக சர்வதேசத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்பதே நோக்கமாகும் என திருகோணமலையை சேர்ந்த சிவில் செயற்பாட்டாளர் கோகிலா வதனி இது குறித்து மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற்று, ஒரு தசாப்தத்தின் பின்னணியில், இன்னொரு தலைமுறை வளர்ந்து வருகின்றது. இவ்வாறு வளர்ந்துவருகின்ற தலைமுறையினர், கற்றுக்கொள்கின்ற வரலாறு, வெற்றியாளர்களின் செல்வாக்குக்கு உட்பட்டதாக எழுதப்படுகின்றது.
இது மிகுந்த ஆபத்தானது. வெற்றியாளர்களால் கட்டமைக்கப்படும் வரலாற்றைக் கேள்விக்கு உட்படுத்தி, அடுத்த சந்ததிக்கு, தமிழர்களுக்கான உண்மையான வரலாற்றைக் கடத்துவதன் மூலமே, நீதிக்கானதும் உரிமைக்கானதுமான கோரிக்கைகளை உயிர்ப்புடன் முன்னெடுத்துச் செல்ல முடியும். இறுதிப்போரின் நாள்களில், உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது.
கிடைக்கும் சொற்ப அரிசியையும் நீரையும் உப்பையும் சேர்த்து, கஞ்சி வழங்கும் நடைமுறை முள்ளிவாய்க்காலில் பின்பற்றப்பட்டது. அதை வரிசையில் நின்று, வாங்கிப் பருகி தமிழ் மக்கள் பசிபோக்கினர். கஞ்சிக்காக வரிசையில் நின்றபோது, எறிகணைகள் வீழ்ந்து வெடித்து, பலர் இறந்தனர்.
அந்தக் கஞ்சியை மறக்கக்கூடாது என்பதற்காகவே, ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பருகும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இவ்வாறான துன்பகரமான சம்பவத்தை வடகிழக்கில் நினைவு கூற பல தடைகளை ஏற்படுத்துகின்றனர்
.தெற்கில் பாற்சோறு வழங்கும் கலாசாரம் சாதாரணமாக இடம் பெறுகின்றது அவர்களது சுதந்திரம் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது இது வடகிழக்கில் இல்லாமல் ஆக்க சதித் திட்டங்கள் நடந்தேறுகிறது.
முள்ளிவாய்க்காலில் இழக்கப்பட்ட உயிர்களுக்கும் சிந்தப்பட்ட குருதிக்கும் நீதி கோரி போராடுதல் என்பது, எதிரிகளை தண்டிப்பதனூடாக மாத்திரம் நிகழ்வதல்ல.
முள்ளிவாய்க்கால் முடிவு தமிழ் மக்கள் மீது ஏன் திணிக்கப்பட்டதோ, அதைத் தாண்டி நின்று போராடுவதற்கான ஓர்மத்தையும் ஒற்றுமையையும்கூட ஒருங்கிணைப்பதற்கான களமாகவும் இருக்க வேண்டும்.
அதுதான், உண்மையான நினைவேந்தலாக இருக்க முடியும். இலங்கை அரசாங்கம், தமிழ் மக்கள் நடத்திய நினைவேந்தல் நிகழ்வுகளை பொதுவாக தடைசெய்கிறது. பொது இடங்களில் நிகழ்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது, மேலும் சில சமயங்களில் பாதுகாப்பு படையினர் தடை விதிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் நிம்மதியாக நினைவேந்தலை வீதியோரங்களில் கஞ்சி வழங்கி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது இது சாதாரண பொது மக்கள் முதல் தமிழ் அரசியல் வாதிகளுக்கு கூட இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியே உள்ள நாடுகளில், குறிப்பாக கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு தூபியுடன் இடம் பெற்றாலும் எமது தாயகத்தில் அது முற்று முழுதாக எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் இடம் பெறுகின்றது.
குறித்த இந்த நாளில், பலரும் தங்களது குடும்பத்தினரின் புகைப்படங்களை கடற்கரையில் வைத்து, மலர்கள் வைத்து, விளக்குகள் ஏற்றி, பிரார்த்தனைகள் செய்து, நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆராத் துயரில் ஈகை சுடரேற்றி கண்ணீர் மல்க உறவுகளை நினைவு கூறும் சுதந்திரம் முழுமையாக ஆட்சியாளர்களால் வழங்கப்பட வேண்டும்.
இந்த நிகழ்வுகள், தமிழ் சமூகத்தின் வரலாற்றை நினைவில் வைக்க, சமாதானம் மற்றும் நீதி பெறும் நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன.
இதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே வடகிழக்கு மக்களின் எதிர்பார்ப்பாகும்.