அமெரிக்கா நேற்று நேரடியாக தாக்குதல் நடத்தியும், மோதலில் இருந்து பின் வாங்காத ஈரான், சில மணி நேரங்களில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து சக்திவாய்ந்த, ‘கொரம்ஷார் – 4’ ஏவுகணையை ஈரான் வீசியது.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சண்டை முக்கிய கட்டத்தை நேற்று எட்டியது. ‘ஈரான் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்படுமா என்பது குறித்து இரு வாரங்களில் முடிவு செய்வேன்’ என அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இரண்டு நாட்களுக்குள்ளேயே தாக்குவது என முடிவு எடுத்துவிட்டார்.
ஈரானின் அணுசக்தி வளாகங்கள் மீது அமெரிக்காவின் விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படை நேரடியாக நேற்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
இதில் மூன்று அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல், விமான போக்குவரத்துக்கான தன் வான் பரப்பை மூடியது.
இந்த தாக்குதலுக்காக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பதிலடி தரப்படும் என ஈரான் கூறியுள்ளது. மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க தளங்களும், இஸ்ரேல் நகரங்களையும் தாக்க போவதாக அறிவித்தது.
அடுத்த சில மணிநேரங்களில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா நகரங்களின் மீது 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இரண்டு கட்டங்களாக ஈரான் நேற்று காலை வீசியது.
ஏவுகணை வருவதை கண்டறிந்து இஸ்ரேல் முழுதும் எச்சரிக்கை சைரன் அலறியது. இதனால் மக்கள் பாதுகாப்பு அறைகளில் தஞ்சமடைந்தனர்.