காசாவில் உள்ள ஓட்டலைத் தாக்கியதுடன், உணவு தேடி வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 74 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதால், இஸ்ரேல், தனது கவனத்தை காசா பக்கம் திருப்பி உள்ளது. வடக்கு காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் உடனடியாக மொத்தமாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஹமாஸ் இயக்கத்தினர் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்க இருப்பது தெளிவாகிறது.
இந்த பின்னணியில், காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஹமாஸ் இயக்கத்தினரின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
டிரம்ப் பதவியேற்றவுடன் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 8 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மீண்டும் சண்டை தொடங்கியது.
இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சி வெற்றிபெறவில்லை. இதற்கிடையே, வரும் வாரங்களில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா செல்வார் என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே, போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் காசாவில் இஸ்ரேலிய ராணுவம் உணவகம் மற்றும் உணவு தேடி வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 74 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இஸ்ரேலியப் படைகள் காசாவில் கடலோர ஓட்டலில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர், மேலும் போரினால் பாதிப்பட்ட பாலஸ்தீனியர்கள், தங்களுக்கு தேவையான உணவு உதவியைப் பெற முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர் என்று அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசா நகரில் உள்ள அல்-பக்கா கபே மீது ஒரு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது, அப்போது அது பெண்கள் மற்றும் குழந்தைகளால் நிரம்பியிருந்தாக கூறப்படுகிறது. மேலும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர், பலர் கவலைக்கிடமாக உள்ளனர். குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர் என்று வடக்கு காசாவில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் அவசர மற்றும் ஆம்புலன்ஸ் சேவையின் தலைவர் பாரெஸ் அவாட் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென்று, ஒரு போர் விமானம் அந்த இடத்தைத் தாக்கியது, நிலநடுக்கம் போல அதை உலுக்கியது” என்று பாரெஸ் அவாட் தெரிவித்தார்.