ராணுவத்தில் பெண்கள் பணியாற்றுவது இன்றளவும் ஒருசில நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் பாதுகாப்புக்காவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டும் ராணுவத்தை கொண்டுள்ளன. அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகள், உள்நாட்டு அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளை பொறுத்து ராணுவ சேவை நிர்வகிக்கப்பட்டு பரமாரிக்கப்படுகிறது.
மியான்மர், சூடான் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ ஆட்சியும் நடைபெறுகிறது. ரஷியா, கொரியா, இஸ்ரேல், ஈரான், கியூபா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் 18 வயது நிரம்பிய வாலிபர்கள் கட்டாய ராணுவ சேவையாற்ற வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராணுவத்தில் பெண்கள் பணியாற்றுவது இன்றளவும் ஒருசில நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு நேர்மாறாக நார்வே, சுவீடன், இஸ்ரேல், வடகொரியா, சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் பெண்கள் கட்டாயமாக ராணுவ சேவையாற்ற வேண்டும் என்ற கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் 18 வயது நிரம்பிய வாலிபர்கள் 2 ஆண்டுகள் கட்டாய ராணுவ சேவையாற்ற வேண்டும் என்னும் நடைமுறை உள்ளது. இந்தநிலையில் பெண்களுக்கும் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என அந்த நாட்டின் அரசாங்கம் மசோதா நிறைவேற்றி தீர்மானித்துள்ளது.
அதன்படி 18 வயது நிரம்பிய பெண்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டாய ராணுவ சேவையாற்ற அனுமதிக்கப்பட உள்ளனர். முதலில் விருப்பம் உடையவர்கள் குலுக்கல் முறையில் கட்டாய ராணுவ சேவைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பின்னர் விருப்பம் தெரிவிக்காதவர்களின் பெயர்களை இணைத்து அவர்கள் அடுத்த சுற்றுக்கு கட்டாய ராணுவ சேவைக்கு பயன்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோயுற்றவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கு விலக்களிக்கப்பட உள்ளது. இதனால் நாட்டின் ராணுவம் மேலும் வலிமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.