இஸ்ரேல் ராணுவம் நேற்று காசாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 57 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணயக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 50 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் நேற்று காசாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் 33 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 25 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், ஹமாஸ் அமைப்பினரின் முகாம்கள், சேமிப்பு கிடங்குகள் ஆகிய இடங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.