News

செம்மணியில் மனிதப் பேரவலம் : சிரமதானத்தின்போதும் வெளிக்கிளம்பும் மனித எச்சங்கள்

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சூழ நேற்று ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணிகளின் போது என்புத் தொகுதி எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 11 ஆம் நாள் அகழ்வு நேற்று நடைபெற்றது.

இதன்போது மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியைச் சூழ உள்ள இடத்தில் சிரமதானப் பணிகளும் இடம்பெற்றன. மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் குழிக்குள் மழைநீர் தேங்காது வெளியேறுவதற்கான முன்னேற்பாடாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் குழிகளும் கிண்டப்பட்டன. அந்தக் குழிகளிலும் மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவை தொடர்பான ஆய்வுப் பணிகள் தொடர்சியாக இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், செம்மணி மனிதப் புதைகுழிக்கு அருகில் வேறு புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டுத் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது

அந்தப் பகுதிகள் நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமாகின.

அந்தப் பகுதியில் கடந்த 4ஆம் திகதி அகழ்வின்போது சிறுமியின் ஆடை ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அகழ்வில் மண்டையோடு ஒன்றும் அடையாளம் காணப்பட்டது. எனினும், நேற்று அரைநாள் மாத்திரமே அகழ்வுப் பணி இடம்பெற்றதால் அந்தப் பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம்பெறவில்லை. இன்று குறித்த பகுதியிலும் அகழ்வுப் பணி தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அரைநாள் அகழ்வின் போது இரண்டு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 47 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 44 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top