News

செம்மணி மனித புதைகுழிக்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல்போனோர் அலுவலகமோ செல்லவில்லை ; ரவூப் ஹக்கீம்

 

தேசப்பற்றாளர்களின் அதிகாரத்திற்கு அச்சப்பட்டே அரசாங்கம் மனித புதைகுழிகள் விடயத்தில் கவனம் செலுத்தாது இருக்கின்றது., செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ செல்லவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (09) இடம்பெற்ற  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான  சபை ஒத்துவைப்பு வேளை  விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாம் அனைவரும் கவலையடையும் விடயமொன்று தற்போது இடம்பெறுகின்றது. அதாவது செம்மணியில் மனித புதைகுழிகள் அகழப்படுகின்றன.

தினமும் அங்கு எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. சிறுவர்கள், குழந்தைகள் தமது விளையாட்டுப் பொருட்களுடன் புதைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் தொடர்பில் தினமும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

குறிப்பாக தமிழ் பத்திரிகைகளில் அந்தச் செய்திகளை பார்க்கலாம். ஆனால் தெற்கில் மற்றைய பத்திரிகைகளில் இது தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எங்கேயாவது ஒரு மூலையில் சிறிதாக குறிப்பிடப்படுகின்றன.

யூடியுப் சனல் ஒன்றை நடத்தும் தரிந்து ஜயவர்தன என்பவர் அவ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆராய்கின்றார். ஆனால் அரச தரப்பில் எவரும் இதுவரையில் அந்தப் பகுதியில் கால் வைக்கவில்லை என்று அங்கு அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் கூறுகின்றனர்.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினர் அங்கு சென்றனரா? காணாமல் போனோர் தொடர்பான சட்டத்தின்படி உங்களுக்கு அதிகாரங்கள் உள்ளன.

இதேவேளை அநீதிக்கு எதிரான ஜே.வி.பியின்  இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். அது தொடர்பான ஆணைக்குழு அறிக்கைகள் பல உள்ளன. பல்வேறு மனித புதைகுழிகள் மற்றும் துன்புறுத்தல் நிலையங்கள் தொடர்பில் தகவல்கள் உள்ளன. இது தொடர்பில் என்ன செய்கின்றீர்கள்.

உங்களுடையவர்களின் மனித புதைகுழிகளைகூட இன்னும் அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்திற்கு முன்னால் எமது நாட்டின்  நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் போது, பெயருக்கு கைக்கட்டிகொண்டு பார்த்துக்கொண்டிருக்கவா காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இருக்கின்றது.

அதிகாரங்களை பயன்படுத்த முடியும். அதனை செய்யாமல் இருப்பது ஏன்? உங்களின் தேசப்பற்றாளர்களுக்கு நீங்கள் பயத்துடன் இருக்கின்றீர்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடுகின்றீர்கள் என்றால், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் அபுஹிந் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய இன்னுமொரு அபு இருந்தார். பக்தம்அபு என்பவரே அவர். அவர் இஸ்ரேலை சேர்ந்தவர்.

அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சஹரானின் மனைவியிடமும் முறையாக விசாரித்தால் இந்த விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ளலாம். இவரிடம் சாட்சியங்களை பதிவு செய்ய ஆணைக்குழு கேட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில் அவரிடம் விசாரணை நடத்தியதுடன், பல்வேறு விடயங்களை பதிவு செய்துள்ளனர்.

ஜனாதிபதி காலத்தினால் மூடி மறைக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக அண்மையில் ஜனாதிபதி கூறியுள்ளார். அரசாங்கம், அரசாங்கம் தொடர்பிலேயே விசாரணை நடத்துவதாகவும் கூறியுள்ளார். யார் அவர்கள் என்று நாட்டுக்கு வெளிபடுத்துங்கள்.

நீங்கள் வயிற்றுக்கு தெரியாமல் மருந்து குடிக்க முயற்சிக்க வேண்டாம். உண்மைகளை உண்மையாகவே வெளியிட இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top