அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான 173 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் கடலோர மாகாணமான டெக்சாசில் வனப்பகுதியையொட்டி மலைபிரதேசமான கெர் கவுன்டி உள்ளது. அந்த நகரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பல்வேறு சிற்றோடைகள், ஆறுகள் ஓடுகின்றன.
இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி நள்ளிரவு கெர் கவுன்டியில் திடீர் மழை பெய்தது. அதிகாலை வரை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அங்குள்ள குவாடலூப் ஆற்றின் நீர்மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்தது. சுமார் 3 மணிநேரம் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் உருவாகி பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் 1 மணி நேரத்திலேயே 19 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் இருந்து வெளியேறிய அதிகபடியான தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தால் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்கள் நீரில் மூழ்கி தத்தளித்தன. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் ஏறி தஞ்சம் அடைத்தனர்.
வனப்பகுதி மற்றும் நகரங்களை இணைக்கும் சாலைகள், பாலங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பேரிடர் மீட்புத்துறையினர் சுமார் 20-க்கும் மேற்பட்ட பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மூலமாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தன்னார்வலர்களும் உதவுகிறார்கள். கடலோர காவல்படையை சேர்ந்த ஸ்காட் ரஸ்கன் என்பவர் தனி ஆளாக 165 பேரை மீட்டார்.
இந்தநிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியான 120 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 173 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இருந்து வெள்ள நிவாரண பொருட்கள் குவிந்து வருகிறது.
இந்தநிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் காண்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நாளை (வெள்ளிக்கிழமை) அங்கு செல்ல உள்ளார்.