News

மூழ்குகிறது ஜப்பானின் மிதக்கும் ஏர்போர்ட்

 

ஒசாகா:ஜப்பானின் ஒசாகா கடல் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் அதிசயம் என கருதப்பட்ட கன்சாய் சர்வதேச விமான நிலையம், தற்போது மூழ்க துவங்கியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஒசாகா நகரின் செயற்கை தீவில் கன்சாய் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை கடல் பரப்பின் மேல் மிதப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1980ல் துவங்கிய இந்த விமான நிலையத்தின் கட்டுமானம், 1994ல் நிறைவடைந்தது. அதன்பின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

கடலின் மேற்பரப்பில் மிதப்பதற்காக களிமண் பயன்படுத்தி இதன் அஸ்திவாரத்தை அமைத்தனர்.

இந்த கட்டமைப்பு நீண்ட காலம் தாக்கு பிடிக்கும் என கருதப்பட்ட நிலையில், தற்போது கணிப்புக்கு முன்னதாகவே கடலுக்குள் மூழ்க துவங்கியுள்ளது. செயற்கை தீவின் மேற்பரப்பு 13 அடியும், விமான நிலையம் 45 அடியும் மூழ்கியுள்ளன.

இது, விமான நிலையத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் புயலை தாங்கும் தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடல் மட்டம் உயர்வு மற்றும் இயற்கை காரணிகள், களிமண் அடித்தளத்தால் மிகப்பெரும் எடையை தாங்கி நிற்க முடியாத நிலை ஆகியவற்றால், விமான நிலையம் மூழ்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த விமான நிலையம், ஜப்பானின் பிராந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 2024ல், 3 கோடி பயணியரை இந்த விமான நிலையம் கையாண்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் எந்த பயணியரின் உடைமையும் காணாமல் போனது இல்லை என்ற பெருமை இந்த விமான நிலையத்துக்கு உண்டு. எனவே விமான நிலைய கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் இன்ஜினியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக 1,280 கோடி ரூபாய் செலவில், கடலின் கரை பகுதிகளை பலப்படுத்த சுவர் எழுப்புதல், கீழே இருந்து வரும் நீரின் அழுத்தத்தை தாங்குவதற்காக, செங்குத்து மணல் வடிகால்களை அமைத்தல் ஆகிய பணிகளை செய்ய உள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top