இலங்கையில் இடம்பெற்றுள்ள போர் குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விசாரிப்பதில் சிக்கலொன்று காணப்படுவாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரனுடன் வெளிவிவகாரக் குழு முன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைக்குழி தொடர்பாக கடுமையான கவலை தெரிவித்து, இதை இலங்கை அரசுடன் நேரடியாக எடுத்துரைத்துள்ளதாக டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.
அதன்போது, இலங்கையின் மனித உரிமை மீறல்களில் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மீது இங்கிலாந்து சமீபத்தில் விதித்த தடைகளை வரவேற்ற உமா குமரன், செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டமனித எலும்புக் கூடுகள், இலங்கையில் நிலைத்திருந்த வன்முறை மரபின் ஒரு சாட்சியாக இருப்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனைதொடர்ந்து, கருத்து வெளியிட்ட வெளிவிவகார செயலாளர் டேவிட் லாமி, “செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, எனது கவலை மிகக் கடுமையானது. இதை நாங்கள் கடந்த மாதம் இலங்கை அரசுடன் நேரடியாக எடுத்துரைத்தோம்.
நாட்டின் பல பகுதிகளில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளோம். அவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதி கொண்டுள்ளோம்.
எனவே அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து நாங்கள் ஆராய்ந்துகொண்டு இருக்கிறோம்,” என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கையில் நடந்த அட்டூழியங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பரிந்துரைக்க வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் பரிந்துரையை பிரித்தானிய அரசு ஆதரிக்குமா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த டேவிட் லாமி, “இலங்கை அந்த நீதிமன்றத்தின் உறுப்பினராக இல்லை. எனவே, இடம்பெற்றிருக்கக்கூடிய குற்றங்களை அந்த நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் பெறாது. அதுவே நீங்கள் பரிந்துரைக்கும் செயல்முறையில் உள்ள முக்கியமான சிக்கலாகும்,” என குறிப்பிட்டுள்ளார்.