மியான்மரில், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் நடத்திய வான் வழித்தாக்குதலில் புத்த மடம் இடிந்து தரைமட்டமானது. இதில், நான்கு குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாகினர்.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021ம் ஆண்டு பிப்ரவரியில் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில் சகாயிங் மாகாணத்தின் லின் டா லுா பகுதியில் நேற்று அதிகாலை அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் அங்குள்ள புத்த மடம் இடிந்து தரைமட்டமானது.
இத்தாக்குதலில், அங்கு தங்கியிருந்த நான்கு குழந்தைகள் உட்பட, 23 பேர் பலியாகினர்; 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சகாயிங் பகுதியில், கிளர்ச்சியாளர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக ராணுவத்தினர் நடத்தும் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் நோக்கில், சகாயிங் பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் புத்த மடத்தில் தஞ்சமடைந்தனர்.
இதன் காரணமாக பலர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.