News

வடக்கின் காணிகளை கையகப்படுத்த இரகசிய திட்டம்! கனேடிய தூதுவர் அதிருப்தி

வடக்கில் உள்ள காணிகளை அதிகாரிகளுக்குத் தெரியாமல் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் வர்த்தமானியில் பிரசுரித்துள்ளதாக மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷுடன் இடம்பெற்ற இன்றைய சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

இன்று காலை (14.07.2025) இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையிலிருந்து அடுத்த மாதத்துடன் தனது பணியை நிறைவு செய்து திரும்பவுள்ளதாக கனேடியத் தூதுவர் ஆளுநரிடம் தெரிவித்துள்ளார்.

இதுவரை அவர் வழங்கிய ஒத்துழைப்புக்கள் மற்றும் கனேடிய அரசாங்கம் கடந்த காலங்களில் மேற்கொண்ட உதவிகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் காணி தொடர்பான பிணக்குகள் அதிகளவில் உள்ளமையை சுட்டிக்காட்டிய ஆளுநர், போர் காரணமாக ஆவணங்கள் அழிவடைந்தமை இதற்கு பிரதான காரணமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு காண்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ஆளுநர், கனேடியத் தூதுவருக்கு விவரித்துள்ளார்.

இந்தத் திணைக்களங்களால் வடக்கு மாகாணம் மாத்திரமல்ல ஏனைய பிரதேசங்களிலும் பாதிப்புக்கள் உள்ளதாக தாம் அறிந்திருப்பதாக கனேடியத் தூதுவர் பதிலளித்துள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இடைநடுவில் உள்ளமையால் மக்கள் இன்னமும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அந்த மக்கள் அதனை முழுமைப்படுத்துவதற்கு உதவிகள் தேவை எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top