அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பல மணி நேரம் பெய்த கனமழையால், விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. நாடு முழுதும் 10,000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன
அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று முன்தினம் மாலை துவங்கி, இரவு வரை கனமழை தொடர்ந்து கொட்டியது. வடகிழக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்களான வாஷிங்டன், பால்டிமோர், நியூஜெர்சி, விர்ஜினியா ஆகிய நகரங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் சாலைகள், பெட்ரோல் பங்குகள், பொது மக்கள் அதிகளவு பயன்படுத்தும் சப்வே எனப்படும் சுரங்க ரயில் நிலையங்களுக்குள் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. நியூயார்க் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ள நீரில் தத்தளித்தன.
நியூயார்க் மற்றும் நியூஜெர்சி இடையேயான பேருந்து வழித்தடம் வெள்ள நீரால் துண்டிக்கப்பட்டது. இதனால், குறைந்த அளவிலான பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. நியூஜெர்சியில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. குடியிருப்புகளில் தரைதளங்களில் இருப்பவர்களை மீட்புப் படையினர் மீட்டு, பத்திரமான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நாடு முழுதும் நேற்று முன்தினம் மட்டும், மோசமான வானிலை காரணமாக 1966 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 10,000 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பல மணிநேரம் தாமதமானது.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதி வழியாக, மிக மெதுவாக நகரும் புயல் மேகங்களால் தான் இந்த அளவு மழை பெய்துள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறினர்.