வங்காளதேசத்தில் தேசிய குடிமக்கள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது.
தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து, சகோதரியுடன் ராணுவ விமானத்தில் புறப்பட்ட ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவரை வங்காளதேசத்திடம் திரும்ப ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
சமீபத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றில், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தேசிய குடிமக்கள் கட்சி சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கோபால்கஞ்ச் நகரில் இன்று பேரணி நடந்தது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் அதிகம் இருக்க கூடிய இந்த பகுதியில் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் பேரணி தொடங்கியது.