ரஷ்யாவின் எரிசக்தி வருவாயை குறைக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷ்யா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார். இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘ அமைதி குறித்து புடின் பேசுகிறார். ஆனால், உக்ரைன் மீது தொடர்ந்து குண்டு வீசுகிறார்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் உக்ரைன் மீது போரை நிறுத்தாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்படும்’ என எச்சரித்து இருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் எரிசக்தி வருவாயை குறைக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா போரை முடிக்கும் வரை, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிவித்து உள்ளது.
இது குறித்து,ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறியதாவது: ஐரோப்பா உக்ரைனுக்கான ஆதரவில் பின்வாங்காது. ரஷ்யா தனது போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து அழுத்தத்தை அதிகரிக்கும். புதிய எண்ணெய் விலை வரம்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வரவேற்றுள்ளார். மேலும் ஜெலென்ஸ்கி கூறியதாவது:
தீவிரமான ரஷ்ய தாக்குதல்களுக்கு மத்தியில், சரியான நேரத்தில் மற்றும் அவசியமான நடவடிக்கை. ரஷ்யாவின் போரின் அனைத்து உள்கட்டமைப்புகளும் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக, ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கை, ஒருதலைப்பட்ச கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானவை என்று நாங்கள் கருதுகிறோம், என்றார்.