எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் பிரித்தானியா செல்பவர்களுக்கான (skilled workers) குறைந்தபட்ச வருமான வரம்பு, 38,700 பவுண்டுகளில் இருந்து 41,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
மேலும், பிரித்தானியாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வருமான வரம்பு உயர்த்தப்படுவதைத் தொடர்ந்து, புதிய விதிகளுக்கு அமைய, 111 வகையான தொழில் வாய்ப்புக்கள் வெளிநாட்டவர்களுக்கு இல்லாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனி பிரித்தானியாவில் வெளிநாட்டவர்கள், பராமரிப்பு பணியாளர் (care worker) தொழிலுக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த விதிகள் அனைத்தும் இம்மாதம் 22ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளன என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், 2026ஆம் ஆண்டின் இறுதியில், பட்டப்படிப்பு படிக்காதவர்களுக்கான வேலைகள் செய்பவர்கள் முதல் சில பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர முடியாது எனவும் விதிகள் கூறுகின்றன.
மேலும், ஆண்டு இறுதியில் மொழித்தகுதி, ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ்கள் (CoS), மற்றும் குடும்ப விசா தொடர்பிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த திடீர் முடிவால் பல நாடுகளில் உள்ள பல்வேறுபட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லாது போகும் அபாயம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.