காசாவுக்கான உதவிகள் செல்வதை முடக்கி அங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. எச்சரித்திருக்கும் நிலையிலேயே உதவி பெற வரும் மக்கள் மீது இஸ்ரேலியப் படை மற்றும் அந்த உதவி விநியோகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பட்டினியில் இருக்கும் குடும்பத்திற்காக உதவி பெறுவதற்கு திரண்ட பொது மக்கள் மீது இஸ்ரேலியப் படை சூடு நடத்தியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா மற்றும் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலியப் படை தொடர்ந்து சூடு நடத்துவதாலும் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் இருப்பதாலும் பலரது உடல்கள் அங்கேயே விடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சனிக்கிழமையும் உதவி விநியோகங்களை பெற முயன்றவர்கள் மீது இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதல்களில் 32 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஐ.நா மற்றும் பிரதான தொண்டு அமைப்புகளுக்கு மாற்றாகவே காசா மனிதாபிமான நிறுவனம் என்ற அமைப்பு கடந்த மார்ச் கடைசி பகுதி தொடக்கம் இந்த உதவி விநியோகங்களை முன்னெடுத்து வருகின்றது. இங்கு தாக்குதல் அச்சம் அதிகரித்திருந்தபோதும் வேறு வழியில்லாத ஆயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் உதவிகளை பெற முண்டியடித்து வருகின்றனர்.
இவ்வாறான உதவி விநியோக இடங்களில் இஸ்ரேலியப் படை நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்திருப்பதாகவும் மேலும் 5,754 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காசாவில் நேற்றுக் காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 54 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் அதிர்ச்சி அளிக்கும் எண்ணிக்கையான சிறுவர்கள் உட்பட காசாவில் உள்ள பொதுமக்களை இஸ்ரேலிய நிர்வாகம் வேண்டுமென்றே பட்டினியில் வைத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. அங்கு சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
மாவு போன்ற அத்தியாவசிய உணவுகளை பெற முடியாமல் போயிருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். போர் காலப் பகுதியில் ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் குறைந்தது 71 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 60,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான அறிகுறிகளை காண்பிப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.
ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சாட் செயலி வழியாக பேசி காசாவைச் சேர்ந்த பலரும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு வேளை மாத்திரம் சாப்பிட்டதாகவும் அல்லது சாப்பிடவே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
‘ஒரு தந்தையாக, எனது ஐந்து குழந்தைகளுக்கும் ஒரு ரொட்டித் துண்டையேனும் பெறுவதற்கு காலையில் எழுந்த உடன் உணவு தேட ஆரம்பிக்கிறேன். ஆனால் அனைத்தும் வீணாகிறது’ என்று தாதி ஒருவரான சியாத் என்பவர் தெரிவித்துள்ளார்.
‘குண்டு தாக்குதல்களால் கொல்லப்படாத மக்கள் பட்டினியால் உயிரிழப்பார்கள். இரண்டு மாதங்களுக்கேனும் இந்தப் போரை நிறுத்தி போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவர வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மத்திய காசா பகுதியில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் நேற்று (20) புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. டெயிர் அல் பலாஹ்வின் குடியிருப்பாளர்கள் மற்றும் அங்கு இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் உடன் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவத்தின் அரபு மொழி பேச்சாளர் அவிசாய் அட்ராயீ, எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலியப் படை முன்னர் செயற்படாத பகுதிகளிலும் படை நடவடிக்கையை விரிவுபடுத்தி இருப்பதாக அட்ராயீ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அங்குள்ள பலஸ்தீனர்கள் அவர்களின் பாதுகாப்பிற்காக தெற்கை நோக்கி அல் மவாசி பகுதிக்கு நகர்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
22 மாதங்களை எட்டி இருக்கும் போரில் பெரும்பாலும் அங்குள்ள இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் குறைந்தது ஒரு தடவையேனும் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலியப் படை பல இடங்களிலும் வெளியேற்ற உத்தரவை பிறப்பித்து வருகிறது.
காசாவின் 80 வீதமான பகுதி இஸ்ரேலின் திரும்பப் பெறப்படாத வெளியேற்ற உத்தரவுக்கு உட்பட்ட இடங்களாக இருப்பதாக ஐ.நா மனிதாபிமான நிறுவனம் கடந்த ஜனவரியில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இஸ்ரேல் தனது படை நடவடிக்கையை விரிவுபடுத்துவது காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது அன்புக்குரியவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உறவினர்கள் எச்சரித்துள்ளனர்.