ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை நாடாது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.
அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் இஸ்ரேலுக்கு ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே அணுசக்தி – திட்டத்தை ஈரான் கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தி வருகிறது. அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. இந்த நிலையில் அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அரக்சி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அணுசக்தி திட்டம் தற்போது நிறுத்தப்பட் டுள்ளது. ஏனென்றால் தாக்குதலில் தீவிரமான சேதங்கள் ஏற்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் எங்களது சொந்த விஞ்ஞானிகளின் சாதனை என்பதால் அணுசக்தி செறி வூட்டலை நாங்கள் கைவிட முடியாது. செறிவூட்டல் என்பது தேசிய பெருமைக் குரிய விஷயம் ஆகும். அதை தொடர்ந்து செயல்படுத்துவோம்.
அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் அவை தற்போதைக்கு நேரடிப் பேச்சுவார்த்தைகளாக இருக்காது. எங்கள் அணுசக்தி திட்டத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு உள்ளது. நாங்கள் கடந்த காலத்தில் அதை ஒரு முறை செய்துள்ளோம். மீண்டும் அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது. அது எப்போதும் அமைதியாக இருக்கும் என்பதை நிரூபிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒருபோதும் ஈரான் அணு ஆயுதங்களை நாடாது. அதற்கு ஈடாக, அவர்கள் தங்கள் தடைகளை நீக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.