News

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம்

 

1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த தந்தை செல்வா 1956 ஆம் ஆண்டு திருகோணமலையில் இடம்பெற்ற கட்சியின் மாநாட்டில் தமிழ் இன அழிப்பை இலங்கை அரசாங்கம் கட்டமைத்துள்ளதாக கூறியிருந்தார்.

தமிழரசுக் கட்சி ஆரம்பித்த ஆண்டில் அம்பாறை கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் சிங்கள மக்களுக்கு அதிக அளவு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னர் எழுந்த இன முறுகலின் பிரகாரம் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பு நடைபெறுவதாக தந்தை செல்வா வியாக்கியானம் செய்திருக்கலாம்.

இங்கே கேள்வி என்னவென்றால், தந்தை செல்வா வழியில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பது எந்த அடிப்படையில்? இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணைக்கான கூட்டுரிமை செயற்பாட்டில் இணைவதா அல்லது கட்சி அரசியல் செயற்பாடுகளுடன் தேர்தல் அரசியலில் மாத்திரம் கவனம் செலுத்துதல் என்ற பின்புலத்திலா என அந்த அழைப்பை நோக்க முடியுமா என்பது தான்.

இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்பது மாத்திரமே ஈழத் தமிழர் தரப்பின் ஒருமித்த கோரிக்கையாக இருக்க வேண்டும். போர்க் குற்ற விசாரணை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விசாரணை என்ற கோரிக்கைகள் தமிழர் தரப்பில் அவசியமில்லை.

ஏனெனில், 1950 களில் இன அழிப்பு ஆரம்பிக்கிறது. ஆயுதப் போராட்டம் என்பது இடையில் ஒரு முப்பது வருடங்கள் மாத்திரமே. அந்த முப்பது வருடங்களிலும் வடக்குக் கிழக்கில் இராணுவம் நடத்திய கொலைகள் சித்திரவதைகள் மற்றும் காணி அபகரிப்புகள், புத்தர் சிலை அமைத்தல் எல்லாமே தமிழ் இன அழிப்புத் தான். 2009 இற்குப் பின்னர் போரில் வீடுகளை இழந்த மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய வீடுகள் அமைந்துள்ள வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவுக் கற்கள் கூட பௌத்த மரபுரிமை அடையாளங்களுடன் அமைந்துள்ளன.

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் | Genocide Independent Mechaninsm Iiim

 

ஆகவே, தமிழர் மரபுரிமைகள் மறைக்கப்பட்டு சிதைக்கப்பட்டு பௌத்த மரபுரிமை அடையாளங்கள் தமிழர் பிரதேசங்களில் நிலை நாட்டப்படுகின்றமையும் இன அழிப்புத் தான். 2016 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் வரலாற்று பாட நூல்களில் பௌத்த சமய வரலாறுகளும் சிங்களச் சொற்களும் புகுத்தப்பட்டுள்ளன. 2009 இற்குப் பின்னர் மகாவம்சம் ஆறு பிரிவுகளாக எழுதப்பட்டு தமிழ் மக்களின் மரபுரிமைகள் அடையாளங்கள் அனைத்தும் பௌத்த கலை கலாச்சாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

யாழ் பொது நூலகம் 1981 இல் தமிழர்களினால் எரிக்கப்பட்டு சிங்கள மக்கள் மீது பழிசுமத்தப்பட்டுள்ளதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இவை எல்லாமே இன அழிப்புத்தான். இந்த ஆதாரங்களோடு ஜெனீவா மனித உரிமைச் சபையில் இன அழிப்புக் கோரிக்கை மாத்திரமே தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட வேண்டும். ஐநா யுனெஸ்கோ விதிகளின் பிரகாரம் பாட நூல்களை மொழிபெயர்க்க முடியாது. அதுவும் ஓர் இனத்தின் வரலாற்றை மொழிபெயர்க்க முடியாது.

ஆனால், இந்த விடயங்கள் எதுவும் தமிழ்த் தேசியக் கட்சிகளினால் இதுவரை சுட்டிக்காட்டப்படவில்லை. இப் பின்னணியில்தான் தமிழ் இன அழிப்புக்கான சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை ((International Impartial and Independent Mechaninsm – IIIM) மிகப் பொருத்தமானது என அமெரிக்கச் சட்ட வல்லுநரான பேராசிரியர் பிரான்ஸிஸ் பொய்ல் (Francis Boyle) ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அப்போது வழங்கியிருந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

சிரிய நாட்டு விவகாரத்தில் 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் தோற்றுவிக்கப்பட்ட IIIM என்ற சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு ஒப்பான பொறிமுறையே இலங்கை விடயத்திலும் பொருத்தமானது எனவும் பிரான்ஸிஸ் பொயில் சுட்டிக்காட்டியிருந்தார். பிரான்ஸிஸ் பொய்ல் கூறியதன் பிரகாரமே இப் பொறிமுறை பற்றி 2021 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் நிபந்தனை விதித்திருந்தன. ஆனால் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் நான்காவது கோரிக்கையாகவே IIIM குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் ஒரு வருட காலத்துக்குள் இந்த IIIM என்ற இப் பொறிமுறை சாட்சியங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற மட்டுப்படுத்தல் ஒன்றை கஜேந்திரகுமார் அப்போது முன்வைத்திருந்தார்.

ஆனால் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கபடவில்லை. இதன் காரணமாக சாட்சியங்களை சேகரிக்கும் ஒஸ்லாப் என அழைக்கப்படும் (Human (Rights OHCHR Sri Lanka Accountability Project – OSLAP) அலுவலக அலுவலக பொறிமுறை ஒன்றையே ஜெனிவா மனித உரிமைச் சபை பரிந்துரைத்தது. தற்போது நடைமுறையில் உள்ளதும் இப் பொறிமுறை தான். இது இன அழிப்பு விசாரணைக்குரியது அல்ல. ஆகவே இப்போது கூட IIIM எனப்படும் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை மீண்டும் ஒருமித்த குரலில் வலியுறுத்த முடியும். ஜெனீவாவின் பல பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ள காரணத்தால் இப் பொறிமுறையை தமிழ்த்தரப்பு வலியுறுத்துவதோடு முதற் தர கோரிக்கையாகவும் இன அழிப்பு என்பதை மாத்திரம் வலியுறுத்தியும் அறிக்கையை மீண்டும் தயாரிக்க வேண்டும். வெறுமனே சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துங்கள் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல.

ஏனெனில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளினால் ஜெனீவா மனித உரிமைச் சபையில் கோரப்படுகின்ற இரண்டு வகைக் குற்றங்களான போர்க்குற்றம் (War Crimes) மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் (Crimes Against Humanity) ஆகியவை மட்டுமே விசாரணை செய்யும் நிலை ஏற்படும். இந்த இரண்டு குற்றங்களுக்கும் மேலான பெருங்குற்றமான இன அழிப்பை (Genocide) அந்த சர்வதேச நீதிமன்றத்தில் முழுமையாக விசாரித்த பின்னரே, போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற இரண்டு குற்றங்களுக்கும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழர் தரப்பு கூட்டாகவும் அழுத்தமாகவும் முன்னவைக்க வேண்டும்.

குறிப்பாக, இன அழிப்பு முதலில் விசாரிக்கப்பட்டு அதற்கு உட்பட்டவையாகவோ அல்லது அதற்குக் குறைவான அடுத்த கட்ட நிலையில் தான் மற்ற இரு வகை குற்றங்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இன அழிப்பு என்ற பார்வையில் அணுகப்படாவிடில் அதற்குரிய குற்றங்கள் எல்லாம் மற்றைய இரண்டுக்குள் மாத்திரம் உள்வாங்கப்பட்டு இன அழிப்புக்கு ஏற்ற நீதி நடைமுறை மறுக்கப்படும் ஆபத்து உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் இதுவரை கால அறிக்கையிடல்கள், குறிப்பாக 2015 இல் முன்வைக்கப்பட்ட OISL எனப்படும் (Report of the OHCHR Investigation on Sri Lanka – OISL) விசாரணை அறிக்கை உள்ளடங்கலாக போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை மட்டும் நடந்திருப்பதாகவே உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த அறிக்கையிடல்கள் ‘இன அழிப்பு ‘ என்ற பெருங்குற்றத்தைத் தவிர்த்ததற்குக் காரணம் அதற்குரிய சுட்டிக்காட்டலுடனான குறிப்பு விதிமுறைகளுடன் (Terms of Reference – ToR) தீர்மானங்கள் இயற்றப்படாமையாகும். இதற்கு புவிசார் சர்வதேச அரசியல் பிரதான காரணம். அதேநேரம், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) 2002 ஆம் ஆண்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலச் சட்டம் (Rome Statute) 2002 ஜூலை மாதத்திற்குப் பின்னரான குற்றங்களை மட்டும் கையாளும் அதிகாரத்தைக் குறித்த நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ளது. ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான பெரும் உத்தி (Grand Strategy) 1950 களின் இறுதியிலிருந்து ஆரம்பிக்கிறது.

அதேவேளை, 1950 இல் இன அழிப்புக்கு எதிரான சாசனத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருப்பதால் இன அழிப்புக்கான கால வரையறை சிறப்புத் தீர்ப்பாயம் உருவாகும் பட்சத்தில் அகலமாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேற்படி உதாரணங்களுடன் 2009 இற்குப் பின்னரும் இன அழிப்புத் தொடருகிறது என்பதையும் தமிழ்த் தரப்பு சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கை தொடர்பாக இதுவரைகால ஐ.நா. அறிக்கையிடல்களும் இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) கால எல்லையான 2002-2009 பகுதியையே தமது பிரதான கால எல்லையாகக் கொண்டிருந்தன. அத்துடன், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளிப்பதை விடவும் ஒரு சிறப்புக் குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal ICT) அமைவதே மேலானது. கால வரையறை, குற்ற வரையறை, கனதி போன்ற இன்ன பிற காரணிகளால் அது மிகவும் உகந்ததாக அமையும்.

யூகோஸ்லாவியா (1993) , ருவாண்டா (2000) ஆகியவற்றுக்கு பின், அதுவும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் உருவான 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறான சிறப்புக் குற்றவியல் தீர்ப்பாயங்கள் அமைப்பது தொடர்பான தயக்க நிலை ஐ.நா. வட்டாரங்களில் காணப்பட்டது. இருந்தாலும் அதற்கான கோட்பாட்டு ரீதியான வாய்ப்பு இன்னமும் இருக்கவே செய்கிறது (ஐ.நா. சாசனத்தின் உறுப்புரை 22 (UN Charter Article 22) ஐ.நா. பொறிமுறைக்கு அப்பால் சர்வதேச நீதிமன்றில் (International Court of Justice – ICJ) இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் இன அழிப்புக்கான பொறுப்பு விசாரிக்கப்பட வேண்டும்.

குறிப்பிடப்படும் குற்ற வகைகளுக்கான ஆதாரங்களைத் திரட்டுவது, குற்றப்பத்திரங்களைத் தயார் செய்து அவற்றுக்கான விசாரணைகளை வேறு வேறு நீதிமன்றங்களில் தொடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் செயற்பாடுகள் விசாரணை பொறிமுறை என்பதற்குள் அடங்கும். ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றமோ, தீர்ப்பாயமோதான், முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும். அரசுகளின் குற்றத்தை விசாரிக்கவல்ல சர்வதேச நீதிமன்றம் தொடக்கம் பல பிராந்திய மற்றும் வெவ்வேறு நாடுகளின் நீதிமன்றுகளிலும் குறித்த குற்றங்களுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் வலு கூட இந்தப் பொறிமுறைக்கு இருக்கும்.

ஆகவே, இந்தப் பொறிமுறையைத் தான் தமிழர்கள் கூட்டாகக் கோர வேண்டும்.என பிரான்ஸிஸ் பொயஸ் வலியுறுத்தியிருந்தார். அதேநேரம், ஐ.நா. சாசனத்தின் உறுப்புரை 22 இற்கு அமைவாக சிறப்புத் தீர்ப்பாயம் அமைவது, அதுவும் ருவாண்டாவுக்கு உருவாக்கப்பட்டதைப் போல ஏற்படுத்தப்படுவது சாலச் சிறந்தது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேநேரம், மியன்மார் குறித்த இதேபோன்ற பொறிமுறை ஐ.நாவின் ஜெனீவா மனித உரிமைச் சபை ஊடாக 2018 செப்ரம்பரில் அமைக்கப்பட்டது. இதை ஐ.நா பொதுச் சபையும் வரவேற்றிருந்தது. ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானங்களுக்கு நிகரான வலுவையே ஜெனீவா மனித உரிமை சபையின் தீர்மானங்களும் கொண்டுள்ளன என்ற வகையில் ஜெனீவா உரிமைச் சபையிடமும் இந்தப் பொறிமுறைக்கான கோரிக்கையை முன்வைப்பதும் பொருத்தமானது.

இதனைத் தமிழ்த் தரப்பு கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திற்கான அழைப்பிதழ் முன்பக்கத்தில், போர்க்குற்ற விசாரணை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றி விசாரணை மற்றும் இன அழிப்பு தொடர்பாக கலந்துரையாடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இங்கே இன அழிப்பு என்பதை மூன்றாம் இடத்திற்கு தள்ளி போர்க்குற்ற விசாரணை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விசாரணை ஆகியவற்றுக்கு முக்கியத்தும் வழங்கப்பட்டிருந்தமை மிகத் தவறு.

ஆகவே, தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் இக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விசாரணைப் பொறிமுறைகள் குறித்து மேலும் விவாதிப்பது சாலச் சிறந்தது. குறிப்பாக கஜேந்திரகுமார் இதனை கவனத்தில் எடுப்பது நல்லது. வேறு சட்ட வியாக்கியானங்கள் சொல்வதை விடுத்து, நியாயமான காரண – காரியங்களை தேட வேண்டும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top