அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் வௌிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சூழலில் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல்களை முன்னெடுத்தன. அதனால் எமது அணுசக்தி தொடர்பில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு முன் அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘பைனான்சியல் டைம்ஸு’க்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர், ‘பேச்சுவார்த்தைகளின் நடுவில் அவர்கள் ஏன் எங்களைத் தாக்கினர் என்பதை விளக்க வேண்டும். எதிர்கால பேச்சுவார்த்தைகளின் போது இத்தகைய தாக்குதல்களை மீண்டும் செய்யப் போவதில்லை என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் செய்த சேதத்திற்கு ஈரானுக்கு இழப்பீடு வழங்குவது அவசியம்.
பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு வொஷிங்டனிடமிருந்து நம்பிக்கையை வளர்க்கும் தெளிவான நடவடிக்கைகள் தேவை. குறிப்பாக, நிதி இழப்பீடுகள் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உத்தரவாதங்கள் அவற்றில் பிரதானமானவை.
மக்கள் மத்தியில் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு உணர்வுகள் மிக அதிகம். இனி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், அவர்களால் ஏமாற்றப்படாதீர்கள்.
அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அது அவர்களின் பிற நோக்கங்களை மறைப்பதற்கான ஒரு மறைப்பு மட்டுமே என்று மக்கள் கூறுகிறார்கள்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.