இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இந்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் அவர்கள் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட அகழ்வின் 27வது நாளான இன்று (01) மேலும் 4 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை 122 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 112 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.