News

பகீர் கிளப்பும் திருகோணமலை கடற்படை முகாம்: உண்மைகளை கக்கும் முன்னாள் கடற்படை தளபதி!!

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இயங்கிய ‘கன்சைட்’ எனப்படும் நிலத்தடி சித்திரவதை முகாம், ஒரு சட்டவிரோத தடுப்பு மையமாக இருந்ததாக முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (சி.ஐ.டி.) வழங்கிய வாக்குமூலத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர் கடந்த 2010 ஒக்டோபர் 1 ஆம் திகதி கடற்படை உளவுத்துறை பணிப்பாளராக பதவியேற்றபின், அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவிடமிருந்து எழுத்து மூல அனுமதி பெற்று ‘கன்சைட்’ முகாமை பார்வையிட்டதாக தெரிவித்துள்ளார்.

அதன்போது, அங்கு 40 முதல் 60 வரையிலானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் எல்லோரும் சட்டப்படி கைது செய்யப்பட்டோ, நீதிமன்ற உத்தரவோ இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணையின் போது இந்த முகாமில் இரு வெளிநாட்டவர்கள் உட்பட பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை பல சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக கடற்படை தளபதியிடம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களின் பெயர் பட்டியலை கோரியிருந்தாலும், தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட இதுவரை அந்த விவரங்களை வழங்கவில்லை என சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

2010 ஜூலை 23 ஆம் திகதி கேகாலைச் சேர்ந்த சாந்த சமரவிக்ரம எனும் நபர், அலவ்வ காவல்துறையினால் கைது செய்யப்பட்டபின் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியதாக கூறியிருந்த நிலையில், சி.ஐ.டி. விசாரணையில் அவர் கடற்படையினரின் உதவியுடன் ‘கன்சைட்’ முகாமில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கொழும்பு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில், கேகாலைச் சேர்ந்த சாந்த சமரவிக்ரம மற்றும் இப்பாகமுவையைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் ‘கன்சைட்’ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.ஐ.டி அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும், விசாரணையில் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் அலவ்வ காவல் நிலையத்தின் அப்போதைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 காவல்துறையினரும் ‘கன்சைட்’ முகாமின் பொறுப்பாளராக இருந்த ரணசிங்க உள்ளிட்ட 5 கடற்படையினரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன கடந்த ஜூலை 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ‘கன்சைட்’ முகாமில் ஒரு “விஷேட உளவுப் பிரிவு” செயல்பட்டதாகவும், அது கடற்படையின் உளவுத் துறையுடன் தொடர்பில்லாததாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த பிரிவில் டி.கே.பி. திஸாநாயக்க கட்டளையிட்டதாகவும், அதில் ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, சந்தமாலி, கௌசல்யா உள்ளிட்ட கடற்படை வீரர்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நிஷாந்த உலுகேதென்னவுக்கு எதிராக, தண்டனைச் சட்டக் கோவையின் 356, 141, 296, 32, 47 ஆகிய பிரிவுகளின் கீழ் கடத்தல், சட்டவிரோத சிறைவைப்பு, கொலை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சி.ஐ.டி. அப்போது கடற்படை தளபதியாக இருந்த சோமதிலக திஸாநாயக்க மற்றும் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதியாக இருந்த கொமாண்டர் கொலம்பகே ஆகியோரையும் விசாரணை வலயத்துக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த சி.ஐ.டி. அதிகாரிகள், விசாரணைகளுக்காக சாட்சிகளைத் தேடி சென்றபோது, அவர்களை கடற்படை உளவுத்துறை அதிகாரிகள் பின்தொடர்ந்து அச்சுறுத்தியதாகவும், அந்த விவரம் பொல்கஹவல நீதிமன்றத்தில் சி.ஐ.டியினரால் அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் காங்கேசன்துறையைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் ரூபசிங்க என்பவரே சி.ஐ.டி.யினரை பின்தொடர உத்தரவிட்டதாகவும், அவர் நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டதாகவும் சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் நிஷாந்த உலுகேதென்னவுக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்ற போதும் கூட, குறித்த ரூபசிங்க நீதிமன்றத்தில் இருந்ததாகவும், அதையும் சி.ஐ.டி. நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உளவுப் பிரிவு பொறுப்பாளராக இருந்த பாரதி மற்றும் கடற்படையின் முன்னாள் அதிகாரியான விஜேகோன் ஆகியோர் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில், ‘கன்சைட்’ முகாமில் இரு வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது.

மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக, பருத்தித் துறையைச் சேர்ந்த கரன் மற்றும் சரீதா எனும் கணவன் மனைவியைப் பற்றி சி.ஐ.டி. விசாரிக்க சென்றபோது, அவர்களை கடற்படையினர் பின்தொடர்ந்ததாகவும், அவர்கள் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாகவும், மேலதிக விசாரணை அறிக்கையை சி.ஐ.டி. ஓகஸ்ட் 24 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன அந்தநாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top