இஸ்ரேல் பிணைக்கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் உட்பட, காசாவை முழுமையாக கைப்பற்ற அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நடக்கிறது.
கடந்த 2023 அக்டோபரில் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்தி 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
அமைச்சரவை கூட்டம் இதைத் தொடர்ந்து துவங்கிய போரில், காசா பகுதியில் 60,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அங்கு பசி, பட்டினி, மருத்துவ வசதி கிடைக்காதது என, ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காசாவுக்கான மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுப்பதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா மற்றும் பிணைக்கைதிகள் தொடர்பான அடுத்தக்கட்ட நகர்வு குறித்து விவாதிக்க பாதுகாப்பு அமைச்சரவையின் கூட்டத்தை கூட்டினார்.
அப்போது, பிணைக்கைதிகள் இருக்கும் பகுதிகள் உட்பட காசா முழுதையும் கைப்பற்றவேண்டும் என உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிகாரிகள் எதிர்ப்பு ஹமாஸ் பயங்கரவாதிகள், பிணைக்கைதிகளை வைத்திருக்கும் பகுதியை நோக்கி தரைப்படையினர் செல்லும்போது, பிணைக்கைதிகள், படைவீரர்கள் உயிரிழக்க நேரிடும் என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஆனால், இதை ஏற்காத அதிகாரிகள் பதவி விலகலாம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காசாவை கைப்பற்றும் திட்டம் குறித்த செய்திகளுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் பதிலளித்தனர். இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் திரும்பத் திரும்ப வருபவை; பயனற்றவை. இது எங்கள் முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ஹமாஸ் கூறியுள்ளது.